×

தெருக்களில் கழிவுநீர் தேக்கம் அதிகாரிகளை கண்டித்து மக்கள் சாலை மறியல்

பெரம்பூர்: பெரம்பூர் சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் கடந்த வாரம் பெய்த மழையால், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருக்களில் குளம்போல் தேங்கியது. இதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு தெருக்களில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை மாதவரம் நெடுஞ்சாலையில் திரண்டு, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து செம்பியம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், “எங்கள் பகுதியில் கால்வாய் அடைப்பால் கடந்த 5 நாட்களாக தெருக்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், அவதிப்பட்டு வருகிறோம். கழிவுநீரை அப்புறப்படுத்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இந்த பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags : streets ,
× RELATED அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த...