×

நாகை-நாகூர் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் தொடர் விபத்து

நாகை,அக்.1: நாகை நாகூர் சாலையில் கால்நடைகள் சுற்றிதிரிவதால் அடிக்கடி நடைபெறும் விபத்துக்களை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.நாகை நாகூர் மெயின்ரோடு எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகும். இந்த சாலையில் தான் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படுகிறது. இதுமட்டுமின்றி தனியார் கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளது. இதனால் இந்த சாலையில் இரண்டு சக்கர வாகனங்களில் பயணம் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். நாகை புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து காரைக்கால், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லும் எல்லா வாகனங்களும் இந்த சாலையில் தான் இயங்கும்.

இவ்வாறு எந்த நேரமும் வாகனங்களை பார்த்து கொண்டிருக்கும் நாகை நாகூர் சாலையில் கால்நடைகளின் தொல்லை அதிகமாகவே உள்ளது. சாலைகளை மறித்துகொண்டு குதிரைகள், மாடுகள் நிற்பதால் இரண்டு சக்கர வாகனத்தில் வரும் பயணிகள் திடீரென பிரேக் போடுவதால் கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் சாலையின் குறுக்கே கால்நடைகள் நிற்பதால் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விபத்தை சந்திக்கிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க வேண்டும். அப்பொழுது தான் கால்நடைகளை சாலைகளில் சுற்றிதிரியவிடாமல் உரிமையாளர்கள் இருப்பார்கள். பல முறை நகராட்சியில் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் மெத்தனமாகவே இருந்து வருகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

Tags : road ,Nagai-Nagore ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி