×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடு அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 10ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இவ்விழாவை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலுக்கு பூஜை செய்யப்பட்டு, மேளதாளம் முழங்க ராஜகோபுரம் முன்பு கொண்டு வரப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க காலை 6.30 மணியளவில் பந்தக்கால் நடப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கமிட்டனர். முன்னதாக தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பஞ்சமூர்த்திகளின் ேதர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. விழாவில் கலெக்டர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, கோயில் இணை ஆணையர் ஞானசேகர், ஆர்டிஓ தேவி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெருமாள்நகர் கே.ராஜன், தாசில்தார் அமுல் உள்பட பலர் கலந்து கொண்டனர். பந்தக்கால் நடப்பட்டதால், தீபத்திருவிழாவின் போது பஞ்சமூர்த்திகள் வீதியுலா வரும் மூஷிக வாகனம், மயில் வாகனம், பூத வாகனம், ரிஷப வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் பணிகள் இனி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : devotees ,Thiruvannamalai ,Annamalaiyar Kovil ,
× RELATED கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்