×

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும்

தூத்துக்குடி, அக். 1: தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை உடனே திறக்க வேண்டும் என கிராம மக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகாவை சேர்ந்த சாமிநத்தம், ஒட்டநத்தம் கிராம மக்கள், கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமங்களில் உள்ள பொதுமக்களில் பலர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையில் 16 ஆண்டுகளாக பணியாற்றி வந்தனர். இந்த ஆலை கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகிறோம். சரிவர வேலை இல்லாமல் துயரங்களை சந்தித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் குடும்ப நிலையை புரிந்து கொண்டு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதேபோல் ஓட்டப்பிடாரம் தாலுகா மேலமடத்தை சேர்ந்த ஊர்மக்கள் அளித்த மனு: கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை பார்த்து வந்தோம். சில வதந்திகள் பரவியதன் காரணத்தால் ஆலை, தற்போது மூடப்பட்டு இருக்கிறது.

ஆலை மூடப்பட்டது முதல் ஆலை நிர்வாகம் எங்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறது. ஆனால் தற்போது நிதி பற்றாக்குறையால் ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறோம். இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் கூறி உள்ளோம். அவர்கள் மேலதிகாரிகளிடம் பேசி வருகிறார்கள். இருந்தாலும் ஸ்டெர்லைட் ஆலையில் எங்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.டி.குமாரகிரி கிராம பொதுமக்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஒப்பந்த ஊழியர்கள், புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி, புதுப்பச்சேரி பகுதிகளை சேர்ந்த ஸ்டெர்லைட் ஒப்பந்த தொழிலாளர்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர்.

Tags : Sterlite ,plant ,Thoothukudi ,
× RELATED ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனம் ரூ.401 கோடி நன்கொடை..!!