×

சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஏரல், அக். 1: சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோயிலில், தசரா திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து காளி அம்மன் கொடியுடன் ஏரல் நகர் வீதி மற்றும் சிறுத்தொண்டநல்லூரில் நகர் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் கோயில் வளாகத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊர் மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தசரா திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. முக்கிய திருவிழாக்கள், 8 மற்றும் 9ம் தேதி நடக்கிறது. 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம், நள்ளிரவு 1 மணிக்கு அம்மனுக்கு தசரா சிறப்பு பூஜை, இரவு 2 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளி சிறுத்தொண்டநல்லூரில் நகர் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி (புதன்கிழமை) காலை 7.30 மணிக்கு அம்மன் கற்பக பொன் சப்பரத்தில் ஏரல் நட்டார் அம்மன் கோயில் வந்து சேருதல், காலை 8 மணிக்கு ஏரல் நட்டார் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, 9 மணிக்கு அம்மன் ஏரல் நகர் உலா வரும் நிகழ்ச்சி, 10 மணிக்கு ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோயில் வந்தடைந்து தாகசாந்தி மற்றும் சிறப்பு பூஜையும் நடக்கிறது.

காலை 11 மணிக்கு அம்மன் கடைத்தெருவில் உலா வந்து சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோயிலுக்கு வந்தடைகிறது. அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பகல் 2 மணிக்கு ஏரல் பேட்டை பந்தலில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 6 மணிக்கு அம்மனுக்கு ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் சார்பாக அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஏரல் நகர்வீதி வழியாக சென்று அதிகாலை 3 மணிக்கு சிறுத்தொண்டநல்லூர் கோயில் வந்து அமரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Dussehra Festival ,Muttumalai Amman Temple ,Siruttondanallur ,
× RELATED திண்டுக்கல் மலையடிவார பத்ரகாளியம்மன் கோயில் தசரா பண்டிகை