×

தாயகம் திரும்பிய தமிழர்களாகிய எங்களுக்கு குறைந்தளவு குத்தகை தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்

தஞ்சை, அக். 1: தாயகம் திரும்பி தமிழர்களான எங்களுக்கு குறைந்தளவு குத்தகை தொகையை நிர்ணயம் செய்ய வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பர்மா பஜார் வியாபாரிகள் மனு அளித்தனர்.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.தஞ்சாவூர் பர்மா பஜார் வியாபாரிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜன் தலைமையில் ஏராளமான வியாபாரிகள் அளித்த மனுவில், தஞ்சை வட்டம் புதுப்பட்டினம் கிராமம் நகர புல எண்.87ல் வாய்க்கால் புறம்போக்கில் தாயகம் திரும்பிய தமிழர்கள் கடைகள் வைத்து கொள்ள கடை ஒன்றுக்கு மாதத்துக்கு ரூ.15.50 குத்தகை 1986ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை தொகையை திருத்தி அமைக்கும் நிபந்தனை விதிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் 1994ம் ஆண்டு குத்தகை தொகை ஆண்டுக்கு ரூ.1,650 என உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் வருவாய் கோட்ட அலுவலரால் குத்தகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒரு பசலி ஆண்டுக்கு குத்தகை தொகை ரூ.12 ஆயிரம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் வருவாய்த்துறையில் உடனே ரூ.6 ஆயிரம் செலுத்துங்கள், மீதி ரூ.6 ஆயிரத்தை பிறகு செலுத்துங்கள் என்றனர். இதையடுத்து நாங்கள் உடனே ரூ.6 ஆயிரத்தை செலுத்திவிட்டோம்.

இதற்கிடையில் தஞ்சை கோட்ட வருவாய் அலுவலர் 3.9.2019ம் தேதி கடிதத்தில் குத்தகை தொகை ரூ.1,19,23,629 வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், நடப்பு பசலிக்கான குத்தகை தொகை ரூ.9,19,438 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் ரூ.6.42 லட்சம் வசூல் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள ஒவ்வொரு கடைக்கும் உள்ள குத்தகை தொகை ரூ.1.10 லட்சம் நிலுவை தொகையை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள தகவல் எங்களுக்கு இதுவரை தெரிவிக்கவில்லை. எந்த வழிகாட்டுதலின்பேரில் இந்த தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரியவில்லை. அரசால் செலுத்த சொன்ன குத்தகை தொகை முழுவதையும் நிலுவையின்றி செலுத்தி வருகிறோம். ஆனால் தற்போது ஒவ்வொரு கடைக்கும் ரூ.1.10 லட்சம் நிலுவை உள்ளது என்பது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பு நடத்தி வரும் எங்களின் வாழ்வாதாரமே இந்த கடைகள் தான். எனவே தாயகம் திரும்பிய தமிழர்களாகிய எங்களுக்கு குறைந்தளவு குத்தகை தொகையை நிர்ணயம் செய்து எங்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் காக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆதிதிராவிட முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் சதா.சிவக்குமார், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றி, தமிழ் தேசிய பாதுகாப்பு கழகம் செந்தில்குமார் ஆகியோர் அளித்த மனுவில், ஒரத்தநாடு- பட்டுக்கோட்டை பிரதான சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சமூக நீதியையும் சமுத்துவத்தையும் போதிக்கும் கல்வி நிலையத்தில் ஒரு சார்பு மதத்தை அடையாளப்படுத்தி கடந்த ஒரு வாரமாக மதவெறி பயிற்சியை ஆர்எஸ்எஸ் படை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.

பள்ளி நிர்வாகத்தின் இச்செயல்பாடு அப்பகுதியில் பதற்றத்தையும், பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் மதம் கடந்து சாதி கடந்து அனைத்து சமூக மக்களின் பிள்ளைகளும் சகோதரத்துவத்துடன் அப்பள்ளியில் பயின்று வரும் நிலையில் பள்ளி நிர்வாகத்தின் இந்த ஒருசார்பு மதவெறி பயிற்சி அப்பள்ளி மாணவர்களிடம் ஒற்றுமையின்மையையும், மத இன வேறுபாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இது பள்ளிக்கல்வி விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பானது.திண்டுக்கல் மாவட்டம் பழநி நகராட்சி பள்ளியில் இதுபோல் நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பயிற்சியை அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அறிந்து கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர். இதையடுத்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நகராட்சி பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டனர். எனவே இதை பின்பற்ற ஒரத்தநாட்டில் சமூக பதற்றத்தையும், மத கலவரத்தையும், நல்லிணக்கத்தையும் கெடுக்கும் வகையில் ஆர்எஸ்எஸ் மதவெறி கும்பலை கொண்டு மனித ஒற்றுமையை சீரழிக்கும் பள்ளி கல்வி விதிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பாக செயல்படும் பள்ளியை இழுத்து மூடி அப்பகுதியில் நிலவிவரும் சமூக பதற்றம், அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்கு வெளியே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Tamils ,home ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!