×

நாகர்கோவிலில் குண்டு குழி சாலைகளை சீரமைக்கவில்லை மாநகராட்சியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் ஆணையருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

நாகர்கோவில், அக்.1: நாகர்கோவில் மாநகராட்சியில் சாலைகளை சீரமைக்காததை கண்டித்து நாகர்கோவிலில் மாநகர திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில் மாநகர பகுதி முழுவதும் குண்டு, குழிகளாகி நடந்து செல்ல முடியாத அளவில் மோசமான அளவில் காணப்படும் மாநகராட்சி சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும். நில ஆக்கிரமிப்பு மற்றும் விதிமுறைகளுக்கு மாறாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம், ஆளும் கட்சியினரின் கட்டிடங்களை மட்டும் விட்டுவிட்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவதை கண்டித்தும், குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கேட்டும் நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் நேற்று நாகர்கோவிலில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் வக்கீல் மகேஷ் தலைமை வகித்தார். சாகுல்ஹமீது, சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நகர துணை செயலாளர் வேல்முருகன் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ பேசியதாவது: நாகர்கோவில் மாநகர பகுதியில் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் என அடுத்தடுத்து சாலைகளை தோண்டி பணிகள் முடிந்ததும் சீரமைக்கவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டால் அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி மறுக்கிறது. இதுதான் கடைசி ஆர்ப்பாட்டமாக இருக்க வேண்டும் என்று கூறி அனுமதி வழங்குகின்றனர். தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இல்லாத புதுமை இங்கு நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள இயக்கம் திமுக. அடுத்தவரின் துன்பத்தில் மகிழ்ச்சி அடைபவராக மாநகராட்சி ஆணையர் உள்ளார். குமரி மாவட்ட கலெக்டரிடமும் இந்த பிரச்னை தொடர்பாக முறையிட்டுள்ளோம். கலெக்டர் 52 வார்டுகளிலும் திடீரென்று ஆய்வு செய்து சாலைகளின் நிலைமையை பார்க்க வேண்டும். மாநகராட்சி சாலைகளை சீர் செய்யாவிட்டால் திமுக தொடர்ந்து போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில மீனவரணி  செயலாளர் பெர்னார்டு, முன்னாள் எம்..பி ஹெலன்டேவிட்சன், தில்லைசெல்வம்,  முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜோசப்ராஜ், அவை தலைவர் ஜோசப்ராஜ், பொருளாளர் கேட்சன், துணை செயலாளர்கள் ஜெயராணி ஜோஸ், அர்ஜூனன், தலைமை செயற்குழு உறுப்பினர் சாய்ராம், ஒன்றிய செயலாளர்கள்  எப்.எம்.ராஜரெத்தினம், மதியழகன், சற்குருகண்ணன், நெடுஞ்செழியன், ரமேஷ்பாபு,  ரஹீம், பொதுக்குழு உறுப்பினர்கள் ஷேக்தாவூது, அழகம்மாள்தாஸ், அணிகளின்  நிர்வாகிகள் சிவராஜ், சபீக், பன்னீர்செல்வம், ஜெசிந்தா, வள்ளுவன்,  சுரேந்திரகுமார், செல்வன், பசலியான், ஜோதி, பாரூக், இளங்கோ, ராஜேஷ்குமார்,  வக்கீல் ஆனந்த், பூதலிங்கம்பிள்ளை, வளர்அகிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையரை கண்டித்து திமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அலுவலகத்தைவிட்டு வெளியேறிய ஆணையர்மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் தொடங்கும் முன்னர் ஆணையர் அலுவலகத்திற்கு ஜீப்பில் வருகை தந்தார். அப்போது நகராட்சி சேவை மையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பெண்கள் ஒதுங்கி நின்றிருந்தனர். அவர்களை பார்த்த ஆணையர் இங்கே நிற்க கூடாது என்று சத்தம் போட்டார். இதனையடுத்து அங்கிருந்து பெண்கள் மைதான பகுதியில் வந்தனர். சிறிதுநேரம் அலுவலகத்தில் இருந்து விட்டு ஆர்ப்பாட்டம் தொடங்கியதும் ஆணையர் அலுவலகத்தை விட்டு ஜீப்பில் புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பார்த்து திமுகவினர் கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags : Narakovil ,bomb blast road ,
× RELATED நாகர்கோவிலில் பரபரப்பு: அம்மன் கோயிலில் துணிகர கொள்ளை