×

அரசு மருத்துவமனையில் 104 பேர் அனுமதி 36 நோயாளிகளுக்கு டெங்கு அறிகுறி: கொசுக்களால் மேலும் நோய் பரவும் அபாயம்

திருவள்ளூர், செப். 30: திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் மட்டும் மர்ம காய்ச்சலால் சிறுவர், சிறுமிகள், பெண்கள் உட்பட 104 பேர் உள்நோயாளிகளாக ‘’அட்மிட்’’ ஆகி சிகிச்சையில் உள்ளனர். இதில், 36 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளது. மேலும், பலர் காய்ச்சலால் வந்தவண்ணம் உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் அடுத்தடுத்து, 10 சிறுவர்கள் உட்பட 20 பேர் கடந்த 2016ம் ஆண்டு இறந்தது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாதிப்பு பகுதிகளில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டுள்ளதாக கூறினாலும் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புடன் மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை நடப்பாண்டு அதிகரித்துள்ளது.
டெங்கு வைரஸ் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள், நல்ல நீரில் தான் உற்பத்தியாகும். தற்போது, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருவதால், மழைநீர் தேங்கி இந்த வகை கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகம். எனவே, அரசு தொடர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் உயிர் இழப்புக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் மட்டும் நேற்று மாலை வரை, சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் என மொத்தம் 104 பேர் மர்ம காய்ச்சலால் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதில், ஆந்திர மாநிலம் நகரி சோபனா(12), திருவள்ளூர் சோமு(12), பிரசாத்(10), சுபாஷ்(12), ஜெயா(70), கன்னியம்மாள்(15), தேவி(47), பள்ளிப்பட்டு விஜய்(17), சுபாஷ்(18), ஊத்துக்கோட்டை வளர்மதி(28), விஜயலட்சுமி(45),  வடமதுரை வைஷ்ணவி(13), வைனேஷ்(10), பூண்டி சுவேதா(15), செந்தாமரைகண்ணன்(35), சேலை பிரியங்கா(21), அத்திமாஞ்சேரிபேட்டை சரஸ்வதி(38) உட்பட 36 பேருக்கு டெங்கு அறிகுறி உள்ளது.இங்குள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால், தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, உள்ளே நுழைந்ததும், “ரெபர் டூ சென்னை ஜி.எச்’’ என எழுதி, சென்னை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்திருந்தால் பாதிப்புகளை தடுத்திருக்கலாம். கிராமங்களில் கொசு ஒழிப்புக்கு போதிய ஆட்கள் இல்லை. தற்போது, மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், இம்மாதத்தில் அதிக பாதிப்பு ஏற்படும். பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும் நடவடிக்கை எடுக்காமல், மாவட்டம் முழுவதும், தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தினால் மேலும் உயிர் இழப்புக்களை தடுக்கலாம்’’ என்றனர்.

Tags : Government Hospital ,
× RELATED அரசு மருத்துவமனை தலைமை செவிலியர்...