×

இருளடைந்து கிடக்கும் சிறுசேரி சிப்காட் மென்பொருள் பூங்கா சாலை : பயத்தில் பயணிக்கும் பொறியாளர்கள்

திருப்போரூர், செப்.30 : சென்னை அருகே ராஜீவ்காந்தி சாலையில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில் நுட்ப பூங்கா உள்ளது. சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் சிறுசேரி, ஏகாட்டூர் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த பூங்காவில் டி.சி.எஸ்., காக்னிசன்ட், பட்னி சொல்யூசன்ஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் உள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் இந்த பூங்காவில் சுமார் 3.5 லட்சம் பேர் பணி புரிகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு ஆண்டு இங்குள்ள நிறுவனத்தில் பணியாற்றிய உமா மகேஸ்வரி என்ற மென்பொருள் பொறியாளர் கடத்தப்பட்டு கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அழுகிய நிலையில் சிப்காட் பூங்கா வளாகத்தில் புதர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த பூங்காவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. மேலும், போலீஸ் பூத் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் பணியில் அமர்த்தப்பட்டனர்.  

இந்நிலையில், சிறுசேரி சிப்காட் பூங்காவில் தற்போது மீண்டும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள போலீஸ் பூத்தில் காவலர்கள் யாரும் இல்லை. சாலை சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பலவற்றில் பழுது ஏற்பட்டு வேலை செய்யாத நிலை உள்ளது. மேலும் சிறுசேரி சிப்காட் வளாகத்திற்கு ஏகாட்டூரில் இருந்து செல்லும் சாலையில் உயர் கோபுர மின் விளக்குகள் பெரும்பாலானவை எரியவில்லை. பிரதான சாலையில் உள்ள 16 விளக்குகளில் ஒரே ஒரு விளக்கு மட்டும் எரிகிறது. இதனால் இருளடைந்து கிடக்கும் சாலையில் பெண் மென்பொருள் பொறியாளர்கள் இரவுப்பணிக்கு செல்லும்போது பாதுகாப்பற்ற நிலையில் ஒரு வித பதற்றத்துடனே செல்கின்றனர். மேலும், சிப்காட் வளாகத்தில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் சிறுசேரி சிப்காட் பூங்காவில் எரியாத மின் விளக்குகளை சீரமைத்து தர வேண்டும், 24 மணி நேரமும் போலீஸ் பூத்தில் போலீசார் நியமிக்க வேண்டும், பழுதடைந்த கேமராக்களை மாற்றி புதிய கேமராக்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.   

Tags : Pondicherry Chipkat Software Park Road: Fearing Engineers ,
× RELATED மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர்...