×

ஆற்றில் மாணவர்கள் இறக்கும் சம்பவம் தடுக்க கிராமசபை கூட்டஅழைப்பில் விழிப்புணர்வு வாசகம் கலெக்டருக்கு மக்கள் கோரிக்கை

வலங்கைமான், செப். 30: கிராம ஊராட்சிகளில் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெறும் கிராமசபை கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக கிராம ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் துண்டு பிரசுரங்களில் ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் மாணவர்கள் இறக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த கூடிய வாசகங்களை இடம்பெற செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கின்றது. மேலும் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் சில நிரம்பியுள்ளது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீர்நிலைகளில் குளிப்பதற்கு மற்றும் இதர பயன்பாடிற்கு இறங்கும்போது பரிதாபமாக இறந்து விடுகின்றனர். நீச்சல் தெரிந்த பெரியவர்கள் கூட ஆறுகளில் தவறி விழும்போது ஆறுகளில் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்ட பகுதிகளில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர். வரும் அக்டோபர் 2ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக கிராம ஊராட்சி சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்படுவது வழக்கம். அத்துண்டு பிரசுரங்களில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமான வாசகங்களை இடம்பெற செய்ய திருவாரூர் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village council meeting ,river ,incident ,
× RELATED தற்கொலைக்குத் தூண்டும் கந்துவட்டி...