வேலாயுதம்பாளையத்தில் குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் பயணியர் நிழற்குடை

கரூர், செப். 30: வேலாயுதம்பாளையத்தில் குடிமகன்களின் புகலிடமாக மாறி வரும் நிழற்குடை வளாகத்தை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து வேலூர் செல்லும் சாலையோரம் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது.இதன் அருகே உள்ள மேம்பால பகுதியில் இருந்து கீழே வரும் அனைத்து பேருந்துகளும், இந்த நிழற்குடையின் அருகில் நிற்காமல் கடைவீதி செல்லும் சாலையோரம் நின்று பயணிகளை இறக்கி விட்டு செல்வதால் இந்த நிழற்குடை பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.இதன் காரணமாக நிழற்குடையை சுற்றிலும் மனித கழிவுகளாக பரவி கிடப்பதால் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் வழியாக நடந்து செல்பவர்களும், அருகில் உள்ள நிறுவனங்களை சேர்ந்தவர்களும் துர்நாற்றம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் குடிமகன்கள் மது அருந்தும் பாராகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதி வளாகத்தை பாதுகாத்து சுத்தமாக வைத்திட தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டும் காணாமல் விடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. துர்நாற்றம், தொற்று நோய் பரவும் அபாயம் போன்ற பல்வேறு காரணிகளை உள்ளடக்கிய நிலையில் உள்ள இந்த நிழற்குடை வளாகத்தை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>