×

தென்னிலை நிறுத்தத்தில் இரவு நேரத்தில் பேருந்துகள் நிற்காததால் பயணிகள் அவதி

க.பரமத்தி, செப். 30: தென்னிலை பேருந்து நிறுத்த பயணிகளை இரவு நேரத்தில் பேருந்து ஒட்டுனர்கள் புறக்கணிப்பதால் எழு ஊராட்சிகளை சேர்ந்த பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கரூர் கோவை மற்றும் திருப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 28 கிலோ மீட்டர் தூரத்தில் தென்னிலை பேருந்து நிறுத்தம் உள்ளது. இது எழு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களை இணைக்கும் முக்கிய பேருந்து நிறுத்தமாக உள்ளது. இங்கு தென்னிலை கிழக்கு, தென்னிலை மேற்கு, தென்னிலை தெற்கு, கோடந்தூர், கார்வழி, மொஞ்சனூர், அஞ்சூர் ஆகிய ஏழு ஊராட்சிகளின் குக்கிராம பகுதி மக்கள் பல்வேறு பணிகள் நிமித்தமாக தினமும் கரூருக்கு வேலைக்கு செல்லவும், கோவை, திருப்பூர் ஆகிய வெளியூர்களுக்கு செல்லவும் மேற்கண்ட பகுதி மக்கள் பஸ் ஏறுவதற்கு தென்னிலை பேருந்து நிறுத்தத்திற்குதான் வர வேண்டும். இதனால் பகல் நேரத்தில் எப்போதும் இந்த பேருந்து நிறுத்தம் பகுதியில் கூட்டம் இருக்கும். இதனால் கரூர்- கோவை நெடுஞ்சாலையில் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை கரூர், கோவை செல்லும் சென்று திரும்ப வரும் அரசு பஸ்கள் இங்கு நிற்பதில்லை. மேலும் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்தில் தென்னிலை செல்லும் பயணிகளை தனியார் உணவு விடுதியில் இறக்கி விடுவதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதனால் மேற்கண்ட ஊர்களுக்கு செல்லும் மக்கள் பஸ் வசதியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தகுதியான அரசு பேருந்துகள் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல ஓட்டுனர், கண்டக்டருக்கு அறிவுறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பயணிகள் கூறுகையில், தென்னிலை பேருந்து நிறுத்தத்தில் கரூர், திருப்பூர், கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல அனுமதி இருந்தும் இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை இந்த வழி தடத்தில் செல்லும் பேருந்துகள் நிற்பதில்லை. இதனால் அவசர தேவைக்கு செல்ல வேண்டிய ஊருக்கு செல்ல முடியாமல் போகிறது. அல்லது மணி கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இரவு நேரத்தில் அரசு உத்தரவை மதிக்காமல் செயல்படும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும் என்றனர்.

Tags : Passengers ,stop ,
× RELATED அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து; ஒருவர் பலி: 25க்கும் மேற்பட்டோர் காயம்!!