×

குளித்தலை வாலாந்தூர் சுடுகாட்டுக்கு அடிப்படை வசதிகள் கோரி இன்று நடக்கவிருந்த ஒப்பாரி போராட்டம் திடீர் வாபஸ் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

குளித்தலை, செப். 30: குளித்தலை அடுத்த வாலாந்தூர் சுடுகாட்டிற்கு அடிப்படை வசதிகள் கேட்டு இன்று நடக்கவிருந்த போராட்டம் அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் ராஜேந்திரம் ஊராட்சிக்குட்பட்ட வாலாந்தூர் கிராமத்தில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தினால் இக்கிராமத்தில் இறந்தவர்களை 5 கிலோமீட்டர் சுற்றி எடுத்து சென்று குளித்தலை நகராட்சிக்குட்பட்ட சுடுகாட்டில் அடக்கம் செய்யும் அவல நிலை இருந்து வருகிறது. இதனால் வாலாந்தூர் சுடுகாட்டு பாதியை சரி செய்ய வேண்டும். மயான எரி மேடை அமைக்க வேண்டும். மயான கொட்டகை அமைத்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் வாலாந்தூர் கிராம பொதுமக்கள் சார்பில் இன்று(திங்கட்கிழமை) காலை வாலாந்தூர் சுடுகாட்டில் ஒப்பாரி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இந்த போராட்டம் தொடர்பாக குளித்தலை வட்டாட்சியர் மகாமுனி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வாலாந்தூர் கிராமப்பகுதியில் மயான சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ள ஆதிதிராவிடர் நல சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.19 லட்சத்து 50 ஆயிரத்திற்கு உரிய கருத்துக்கள் நிர்வாக அனுமதி கோரி மாவட்ட திட்ட இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இப்பிரச்னை தொடர்பாக விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வட்டாட்சியருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக எடுத்துக் கூறப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இன்று நடக்கவிருந்த ஒப்பாரி போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதில் குளித்தலை காவல் பயிற்சி உதவி ஆய்வாளர் மகாமுனி, வருவாய்த்துறை, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் மற்றும் வாலாந்தூர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : withdrawal ,peace talks ,shooting ,Valathundur ,
× RELATED பாஜக தேசிய தலைவரான ஜெ.பி.நட்டா,...