×

ஏரல் அருகே தூர்வாரப்படாததால் கருவேலமரங்கள் ஆக்கிரமித்த அகரம் குளம்

ஏரல், செப்.30: ஏரல் அருகேயுள்ள அகரம் குளம் தூர்வாரப்படாததால் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு, மணல் மேடானதால் குளத்தில் தண்ணீர் தேக்க முடியவில்லை.  குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏரல் அருகேயுள்ள சுமார் 75 ஏக்கர் பரப்பளவு கொண்ட அகரம் குளத்தின் மூலம் 250 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்தது. இந்த குளத்திற்கு வைகுண்டம் வடகால் மூலம் ஆறுமுகமங்கலம் குளத்திற்கு தண்ணீர் வந்து அங்குள்ள 3ம் நம்பர் மடை வழியாக தண்ணீர் வருகிறது. குளத்தில் தண்ணீர் இருக்கும் போது இப்பகுதிகளில் நிலத்தடிநீர் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைத்தது. இதனால் இப்பகுதியில் வாழை, தென்னை மரங்கள் செழித்து வளர்ந்தன. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாராததால் மணல் மேடுகளாக மாறியது. மேலும் சீமை கருவேலமரங்கள் ஆக்கிரமித்து குளம் இருந்த இடம் தெரியாமல் காடு போல் உள்ளது.
இதனால் குளத்தில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை. ஒரு மாத விவசாயத்திற்கு கூட தண்ணீர் போதுமானதாக இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு தென்னைகள் பட்டுப்போய் உள்ளது. வாழை, நெல் விவசாயம் கேள்வி குறியாகிவிட்டது.  

குளத்தில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடிநீரும் வற்றி உவர்ப்பாக மாறி வருகிறது. வைகுண்டம் வடகாலில் முறையாக தண்ணீர் வராததாலும், மழைக்காலத்தில் வரும் தண்ணீரை அதிகளவு குளத்தில் சேமித்து வைக்க முடியாத நிலையில் குளம் மணல் மேடாக உள்ளதால் எப்போதும் குளம் வறண்ட நிலையிலேயே உள்ளது. இதனால் அகரம் பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு குளத்தில் வளர்ந்துள்ள முள்செடிகள், மணல் மேடுகளை அகற்றி தூர்வாரி சீரமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.வைகுண்டம் ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் அகரம் பாஸ்கர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்காண்டு பருவமழை பொய்த்து வருவதாலும், வைகுண்டம் வடகாலில் முறையாக தண்ணீர் வராததினாலும் அகரம் குளத்திற்கு தண்ணீர் வந்து சேர்வதில்லை. மேலும் குளத்தில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளதால் காடு போல் உள்ளது. குளமும் தூர்வாரப்படாததால் மணல் திட்டுகள் ஏற்பட்டு அதிகளவு தண்ணீரை சேமிக்க முடிவதில்லை. இதனால் இப்பகுதியில் விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. அரசு உடனடியாக அகரம் குளத்தை ஆக்கிரமித்துள்ள முள்செடிகளை அப்புறப்படுத்தி, தூர்வாரி அதிகளவு தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.

Tags : pond ,Agaram ,Eral ,
× RELATED படர்தாமரை உடலுக்கு நாசம்; ஆகாயத்தாமரை...