×

களக்காடு அருகே துணிகரம் கோயிலில் உண்டியலை உடைத்து கொள்ளை

களக்காடு, செப். 30:  களக்காடு அருகே கோயிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
களக்காடு அருகே உள்ள சவளைக்காரன்குளத்தில் பட்டியல் இனத்தவருக்கு சொந்தமான சந்தனமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் கொடை விழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். மேலும் தினசரி ஒரு கால பூஜையும் நடந்து வருகிறது. தசரா விழா மற்றும் ஆடி மாதங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இந்தாண்டு தசரா விழா இன்று தொடங்குகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோவிலம்மாள்புரத்தை சேர்ந்த வேலு (32) கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று இரவில் பூஜைகள் நடத்த வந்த போது முன்பக்க காம்பவுண்ட் அருகே உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஊர்க்காரர்களிடம் தெரிவித்தார்.

கொள்ளை குறித்து அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் நாட்டாண்மை மதியழகன் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த உண்டியல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு தான் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் உண்டியல் திறக்கப்படவில்லை. நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உண்டியலில் ரூ 10 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கோயிலில்  கைவரிசை காட்டிய மர்ம நபர்களை களக்காடு போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : robbery ,Kalakkad ,Vedarankam temple ,
× RELATED வங்கியில் புகுந்து கொள்ளை முயற்சி