×

உள்ளாட்சி தேர்தலுக்காக 1800 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வந்தது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பெங்களூருவில் இருந்து வேலூருக்கு

வேலூர், செப்.30: உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த வேலூர் மாவட்டத்திற்கு 1800 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்து நேற்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ெகாண்டு வரப்பட்டது.தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை துரிதப்படுத்த கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு இயந்திரங்களை கர்நாடகா, பீகார் மாநிலங்களில் இருந்து கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்திற்கு தேவையான 6 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 27ம் தேதி கொண்டு வரப்பட்டு வேலூர் பிடிஓ அலுவலக குடோனில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெங்களூரு அடுத்த தேவனஹள்ளி குடோனில் இருந்து 1824 கட்டுப்பாட்டு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கன்டெய்னர் லாரியில் 2வது மண்டல இளநிலை பொறியாளர் சீனிவாசன் தலைமையில் நேற்று எடுத்து வந்தனர். இதையடுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுப்புலட்சுமி, 1வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் முன்னிலையில் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வேலூர் பிடிஓ அலுவலகத்தில் உள்ள அறைகளில் வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், `கர்நாடக மாநிலம் ஹூப்ளி பகுதியில் இருந்து கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஓரிரு நாட்களில் எடுத்து வரப்பட உள்ளன. தற்போது கொண்டு வரப்பட்ட இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் அழிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது’ என்றனர்.

Tags : Local Elections ,Bangalore ,policemen ,Vellore ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...