×

அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் இன்று நடக்கிறது கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை,செப். 30: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபதிருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் விநாயகர், முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் மேளதாளம் முழங்க மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் மாதம் 10ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணிதீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும். இவ்விழாவை காண இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான பூர்வாங்க பணிகளின் தொடக்கமாக இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் அருகே பந்தக்கால் முகூர்த்தம் நடக்கிறது. இதற்காக அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தக்காலுக்கு பூஜை செய்யப்பட்டு, மேளதானம் முழங்க எடுத்து வரப்பட்டு சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத, பந்தக்கால் நடப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags : Pandakkal Mukurtha ,festival ,Annamalaiyar Temple ,Carnatic Deepath ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...