×

காஞ்சிபுரத்தை சேர்ந்த உறவினர்கள் 3 பேரிடம் தீவிர விசாரணை செய்யாறு பஸ்சில் வாலிபர் வெட்டிக்கொலை

செய்யாறு, செப்.30: ெசய்யாறில் பஸ்சில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், காஞ்சிபுரத்தை சேர்ந்த உறவினர்கள் 3 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பட்டு நெசவு ெதாழிலாளி முருகன்காளத்தி. இவர்களது 3வது மகன் சதீஷ்குமார்(28), டிப்ளமோ பட்டதாரி. இவருக்கு திருமண தோஷத்திற்கு பரிகார பூஜை செய்ய கடந்த 2 மாதமாக செய்யாறில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். சனிக்கிழமை தோறும் வேதபுரீஸ்வரர் கோயிலில் பரிகார பூஜை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் தனது பெற்றோருடன் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தனர். பின்னர் பெற்றோரை வீட்டில் விட்டுவிட்டு சதீஷ்குமார் காஞ்சிபுரம் புறப்பட்டார். முன்னதாக செய்யாறு பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் டீ குடித்தபோது, அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல், திடீரென சதீஷ்குமாரை ஓட ஓட விரட்டி தனியார் பஸ்சில் ஏறியதும் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியது. அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமார் சிறிது நேரத்தில் இறந்தார்.

இதுகுறித்து, செய்யாறு போலீசார் வழக்குப்பதிந்து செய்தனர். செய்யாறு ஏடிஎஸ்பி அசோக்குமார் தலைமையில் டிஎஸ்பிக்கள் சுந்தரம் (செய்யாறு), தங்கராமன்(வந்தவாசி), குணசேகரன்(போளூர்) ஆகியோர் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், தனிப்படை போலீசார், சதீஷ்குமாரின் செல்போன் எண்களை ஆய்வு செய்து காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலையான சதீஷ்குமாருக்கும் காஞ்சிபுரத்தில் எதிர்வீட்டில் வசிக்கும் வக்கீல் சிவகுமார் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது.இதில் சதீஷ்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து வக்கீல் சிவக்குமாரை தாக்கினாராம். இதுதொடர்பாக காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர். இந்த வழக்கில் சதீஷ்குமார் உள்ளிட்டவர்கள் ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்தது.தொடர்ந்து, கொலையாளிகள் பயன்படுத்திய கார் பதிவு எண் கொண்டு தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதவிர கொலையான சதீஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : relatives ,Kanchipuram ,bus driver ,
× RELATED சென்னை காசிமேட்டில் மாயமான மீனவர்களை...