×

இளம்பிள்ளை அருகே சரக்கு ஆட்டோவில் கடத்திய 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

இளம்பிள்ளை,  செப்.30: இளம்பிள்ளை அருகே, நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு சரக்கு ஆட்டோவில்  கடத்திச்சென்ற 1.5 டன் ரேஷன் அரிசியை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள  மாட்டையாம்பட்டி வழியாக, சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக,  பொதுமக்களுக்கு தகவல் பரவியது. இதையடுத்து மாட்டையாம்பட்டியை சேர்ந்த  சிலர், வீரகாரன் கோயில் வழியாக வந்த சரக்கு ஆட்டோவை தடுத்து  நிறுத்தினர். அந்த ஆட்டோவில் 29 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தி  வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சங்ககிரி வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு  தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வட்ட வழங்கல் அதிகாரி  தியாகராஜன் மற்றும் அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அவர்கள் 1.5 டன் அரிசியுடன் வாகனத்தை  பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, நாமக்கல் மாவட்டம்   மல்லசமுத்திரம் மாமரத்துப்பட்டியை சேர்ந்த சோலைமுத்து  மகன் டிரைவர்  சின்ராஜ்(25) மற்றும் அதே ஊரை சேர்ந்த சேகர் மகன் பிரபாகரன்(30) ஆகிய  இருவரையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர்கள் நாமக்கல்  மாவட்டத்தில் கோழிப்பண்ணை நடத்தி வரும் பிரபல தொழிலதிபருக்கு,  சின்னப்பம்பட்டியில் இருந்து ரேஷன் கடைகளில் இருந்து அரிசி  கடத்திச்சென்றது தெரியவந்தது. மேலும், ரேஷன் அரிசி கடத்த சரக்கு ஆட்டோவின் பதிவு எண்ணை மாற்றி, போலி எண் எழுதியது தெரியவந்தது. தொடர்ந்து எத்தனை ஆண்டுகளாக, எந்தெந்த கடைகளில்  இருந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருகிறது என அதிகாரிகள் விசாரித்து  வருகின்றனர்.

Tags : Ilampillai ,Freight Auto ,
× RELATED சினிமாவை மிஞ்சிய நடுரோட்டில் நடந்த...