×

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அவலம் காய்ச்சல் பாதித்த குழந்தைகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை

ஆத்தூர், செப்.30: ஆத்தூர் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை இல்லாததால், காய்ச்சல்  பாதித்து சிகிச்சைக்கு வரும் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து  சிகிச்சையளித்து வருகின்றனர். சேலம்  மாவட்டம், ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார  பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தற்போது, போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள்  சிகிச்சை  பெறமுடியால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, ஆத்தூர்  சுற்றுவட்டார கிராமங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆத்தூர் அரசு  மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்புடன் ஏராளமானோர்  சிகிச்சைக்காக வருகின்றனர். போதிய மருத்துவர்கள் இல்லாததால், நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெறவேண்டி உள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், மருத்துவமனையில்   உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய  படுக்கை வசதியில்லாததால், தரையில் குழந்தைகளை படுக்க வைத்து  சிகிச்சை அளிக்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,  ‘தொடர் மழை மற்றும் சீதோஷ்ண மாற்றத்தால்  மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள ஆரம்ப சுகாதார  நிலையத்தில், சிகிச்சை பெற்றால் காய்ச்சல் குணமாவது இல்லை. இதனால் ஆத்தூர் அரசு  தலைமை மருத்துவமனைக்கு வருகிறோம். இங்கு போதுமான அளவு  மருத்துவர்களும் இல்லை. படுக்கை வசதியும் இல்லை. எனவே, காய்ச்சல் பாதித்த குழந்தைகளுக்கு, படுக்கை வசதி அல்லது பாய் வழங்கவேண்டும். மேலும், சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Influenza infants ,hospital ,Athurur ,
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...