×

நவராத்திரி விழா துவக்கம் கோயில்களில் கொலு வைத்து வழிபாடு

நாமக்கல், செப்.30:  நவராத்திரி விழா துவங்கியுள்ளதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் அம்மன் கோயில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டுள்ளனர்.நாடு முழுவதும் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது. இதையடுத்து 9 நாள் வழிபாட்டிற்கு மக்கள் தயாராகியுள்ளனர். இதனையொட்டி, அம்மன் கோயில்கள் மற்றும் வீடுகளில் அனைத்து ஜீவராசிகளின் சிறுசிறு உருவங்களை கொண்ட கொலு அமைத்துள்ளனர். நாமக்கல் அருகே செல்லப்பம்பட்டியில் சுயம்பு மகா மாரியம்மன் கோயிலில் 8ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. வரும் 7ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்மனுக்கு தினமும் பல்வேறு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது. நவராத்திரி நாட்களில் ஆன்மிக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி பாடல்கள் பாடுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி மாலை 6 மணிக்கு, நவராத்திரி சிறப்பு ஹோமம், கோயில் வளாகத்தில் நடக்கிறது. இதற்கு தேவையான பொருட்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை செல்லப்பம்பட்டி மகா மாரியம்மன் வார வழிபாட்டு மன்றம் செய்துள்ளது. நவராத்திரியையொட்டி கோயிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நேற்றிரவு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Navratri Festival ,
× RELATED ராமச்சந்திரா மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா