×

குமாரபாளையம் சாயப்பட்டறைகள் விவகாரத்தில் விடுப்பில் சென்ற அதிகாரி கோவையில் பொறுப்பேற்பு

பள்ளிபாளையம், செப்.30:  மருத்துவ விடுப்பில் சென்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கோவையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து, பறக்கும்படை சாமிநாதன் குமாரபாளையத்திற்கு கூடுதல் பொறுப்பேற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் தலைமை பொறியாளராக பணியாற்றிய ஜெயலட்சுமி, கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தார். இதனால், அனுமதி இல்லாத சாயப்பட்டறைகளின் எண்ணிக்கை குறைந்தது. அனுமதி பெற்று இயங்கும் சாயப்பட்டறைகளின் கழிவுநீரையும், ஆய்வுக்கு அனுப்பிய அவர், சுத்தப்படுத்தாமல் வெளியேற்றிய பல சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டித்தார். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்ட சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிக்கை அனுப்பினார். இவரது கடும் நடவடிக்கையால் பள்ளிபாளையம், குமாரபாளையத்தில் கழிவுநீரை சுத்தப்படுத்தாமல் வெளியேற்றிய, உரிமம் பெறாத சாயப்பட்டறைகள் இயக்கத்தை நிறுத்தின. இருந்த போதிலும் கழிவுநீரின் அளவு குறைந்தபாடில்லை.

கடும் நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள், இவர் மீது புகார் செய்தனர். விதிமுறைகளை மீறி புதிய சாய ஆலைகளுக்கு அனுமதி தரப்பட்டதாக புகார்களும் எழுந்தன. கழிவுநீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, அரசு தரப்பில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நடவடிக்கை கூடாது என உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுத்தனர். தொடர்ந்து இருதரப்பிலும் வந்த நெருக்கடியால், வெறுத்து போன பொறியாளர் ஜெயலட்சுமி, 20 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். இதனால் குமாரபாளையம் அலுவலகத்திற்கு புதிய அதிகாரி நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, மருத்துவ விடுப்பை ரத்து செய்துவிட்டு, கடந்த வெள்ளிக்கிழமை கோவை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் சுற்றுச்சூழல் பொறியாளராக ஜெயலட்சுமி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், ஈரோடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் பறக்கும்படை பொறியாளர் சாமிநாதன், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தின் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே நாமக்கல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றினார். மிக குறுகிய காலத்தில் மாறுதலுக்குள்ளானார். இவர், குமாரபாளையம் சாயப்பட்டறைகளின் செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்தவர். மேலும், கடந்த சில மாதங்களாக ஈரோடு பறக்கும்படை அதிகாரியாக இருப்பதால், குமாரபாளையம் அலுவலகத்திற்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கூடுதல் பொறுப்பேற்றுள்ள சாமிநாதன், சாயச்சாலை குறித்த விவகாரத்தில் பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுப்பார் என சிறு சாயச்சாலை உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : officer ,dyeing department ,Kumarapalayam ,
× RELATED தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் ஒன்றிய,...