×

யானைகள் தண்ணீர் குடிக்க வசதியாக குளம் அமைக்கும் பணியில் வனத்துறையினர் மும்முரம்

ஓசூர், செப்.30: வனப்பகுதியில், யானைகள் தண்ணீர் குடிக்க வசதியாக தடுப்பணைகளை தூர்வாரி குளம் அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஓசூர் வனப்பகுதியில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, யானைகள் கூட்டமாக வந்து முகாமிடுவது வழக்கம். ஓசூர் வனப்பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட  வனப்பகுதிகளும் இணைந்து உள்ளது. கால நிலைக்கு ஏற்ப, யானைகள் அடிக்கடி இடம் மாறி கர்நாடகா மற்றும் ஓசூர் வனப்பகுதிக்கு வந்து விடுகிறது. இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி சானமாவு, பீர்ஜேப்பள்ளி, ராமபுரம் உள்ளிட்ட  கிராமங்களில் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.

தற்போது, மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சானமாவு வனப்பகுதிக்குள் உள்ள ஏரி, குளம், தடுப்பணைகளை தூர்வாரும் பணியில், வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், ஏரிக்கரைகளை பலப்படுத்தி, தண்ணீர் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் யானைகள் கிராமத்திற்குள் நுழைவது தடுக்கப்படும். மேலும், எந்த இடையூறுமின்றி மற்ற வன விலங்குகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : forest department ,pond ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே யானைகள்...