×

காய்ந்த தென்னை மரத்துக்கு ₹20,000 நிவாரணம் வேண்டும்

தர்மபுரி, செப்.30: தர்மபுரி மாவட்டத்தில் வறட்சியால் காய்ந்த தென்னை மரத்துக்கு ₹20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்ட உழவர் பேரியக்க செயற்குழு கூட்டம், மாநில துணை தலைவர் சிவசக்தி தலைமையில் நடந்தது. மாநில பொறுப்பாளர் சின்னசாமி வரவேற்றார். மாநிலத் தலைவர் ஆலயமணி, மாநில செயலாளர் வேலுசாமி, பாமக மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், மாநில துணை தலைவர் பாடிசெல்வம் ஆகியோர் பேசினர். இதில், மழைக்காலங்களில் காவிரியில் கரைபுரண்டு சென்று கடலில் கலக்கும் உபரி நீரை, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்திற்கு, தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில், விவசாயிகளுக்கு தேவையான விதைகள் இருப்பு வைத்து வழங்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு, நிவாரணத் தொகையாக, மரம் ஒன்றுக்கு ₹20,000 வழங்க வேண்டும். காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு, பயிர்கள் பாதிக்கப்படும் போது, உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா