×

ராஜபாளையத்தில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்

ராஜபாளையம். செப். 30: ராஜபாளையத்தில் நடைபெற்ற இலவச தடுப்பூசி முகாமில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது.
உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வெறிநோய் தாக்கப்பட்ட நாய் கடிப்பதால், ரேபிஸ் எனப்படும் நுண் கிருமியால் மனிதர்களுக்கு உடல் நலக் கோளாறு ஏற்படும். இந்த உடல் உபாதையானது 4 மாதத்தில் இருந்து அதிகபட்சம் 20 வருடங்கள் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த நோயை முற்றிலும் அழிக்கும் நோக்கில், செப்டம்பர் 28ம் தேதி உலக வெறிநோய் தடுப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்கவும் இந்த தினத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ராஜபாளையம் கால்நடை மருத்துவமனையில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசிகள் போடப்பட்டது. விருதுநகர் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் ராஜபாளையம் கால்நடை மருத்துவமனை நிர்வாகத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்த முகாமில், கன்னி, ராஜபாளையம், லேப்ரடார், லாசப்சோ, டெர்ரியர், பொம்மரேனியன் உள்ளிட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு, ராஜபாளையம் நகராட்சியின் சுகாதார துறை சார்பில் ரேபிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Tags : Rabies Vaccination Camp for Dogs ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...