×

குமுளி மலைச்சாலையில் வாகனம் மோதி சிறுத்தை சாவு? காட்டுபூனை என்கிறது வனத்துறை

கூடலூர், செப்.30: லோயர்கேம்ப் - குமுளி மலைப்பாதையில் வாகனம் மோதி சிறுத்தை குட்டி இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் வனத்துறையினர் இதனை காட்டுப்பூனை என்கின்றனர்.தேனி மாவட்டம், லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மாதா கோவில் மேல் வளைவு அருகே நேற்று முன்தினம் காலை சாலை ஓரத்தில் சிறுத்தைக்குட்டி ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி வழியாக வாகனத்தில் சென்றவர்கள் லோயர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பின் சிறுத்தைக்குட்டியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய கூடலூர் கால்நடை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

தகவல் தெரிந்து பத்திரிக்கையாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று, வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, வாகனம் மோதி இறந்தது, ஆறுமாத வயதுடைய லெப்பேடு கேட் எனப்படும் ஆண் காட்டு பூனை, பிரேத பரிசோதனை செய்து லோயர்கேம்பில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது என்றனர்.ஆனால் பொதுமக்கள் கூறுகையில், சுரங்கனார் காப்புக்காடு அடிவாரப் பகுதியான கழுதை மொட்டை, பெருமாள் கோயில், கொங்கச்சி பாறை, கல்லுடைச்சான்பாறை, ஏகலூத்து, ஆட்டுக்காரன் பாறை மற்றும் அருவாள்தீட்டிப்பாறை ஆகிய பகுதிகளில் சிறுத்தை மற்றும் புலி நடமாட்டம் இருப்பதாக வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. லோயர் மலைச்சாலையில் வாகனம் மோதி இறந்தது சிறுத்தைக்குட்டியாக இருக்கலாம். இல்லாவிட்டால் வனத்துறை ஏன் இவ்வளவு வேகத்தில் யாரையும் காண்பிக்காமல் பிரேத பரிசோதனை செய்து ஏன் புதைக்கவேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

Tags : forest department ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...