×

நவராத்திரி விழாவை முன்னிட்டு மானாமதுரையில் கொலு பொம்மைகள் விற்பனை

மானாமதுரை, செப். 30: நவராத்திரி விழாவை முன்னிட்டு மானாமதுரையில் கொலு பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில்  தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்களுக்கு சிறப்பான வரலாறு உண்டு. இங்கு  ஆண்டுதோறும் முளைப்பாரி ஓடு, விநாயகர் சிலைகள், அகல்விளக்குகள், கொலு  பொம்மைகள், தீச்சட்டிகள் மண்பானை, கூஜா, பூந்தொட்டிகள் தயாரிப்பது வழக்கம்.
நவராத்திரிவிழா நேற்று துவங்கியதை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனையில் மண்பாண்ட  தொழிலாளர் குடும்பங்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். வேலைப்பாடு இல்லாத  பூந்தொட்டிகள், பானை, கலயம் உள்ளிட்ட மண்பொருட்கள் ஒரு வாரத்திற்குள்  தயாரிக்கப்படும்.ஆனால் வேலைப்பாடு மிக்க கொலு பொம்மைகள் தயாரிக்க  மிகுந்த கவனம் தேவை. கலைநயத்துடன் தயாரிக்கப்பட்ட பொம்மைகளுக்கு வண்ணங்கள்  ஏற்றுவதும் முக்கியமானது என்பதால் கொலு பொம்மை தயாரிக்கும் பணி செப்டம்பர்  மாதம் முதல் வாரத்தில் துவங்கியது.கடவுள் உருவம், அரசியல்  தலைவர்கள் தவிர சிறுவர்களுக்கு பிடித்த டைனோசர், ஆங்ரி பேட்ஸ் என  வாடிக்கையாளர்கள் கேட்கும் பல்வேறு விதமான பொம்மைகளை செய்து தருகின்றனர்.

சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதியில் இருந்து பெண்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் வந்து ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து  கொலு பொம்மை விற்பனையில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகள்  கூறுகையில், ‘மண் அள்ளும் டிராக்டர் வாடகை, பொம்மைகளை சுடுவதற்கு தேவையான  விறகு, வர்ணம் தீட்டும் பெயின்ட் வரை அனைத்து பொருட்களின் விலையும்  உயர்ந்துவிட்டது. உற்பத்தி செலவு அதிகரித்தாலும் வாடிக்கையாளர்களுக்கு  குறைந்த விலையிலேயே விற்கிறோம். ஒரு செட் கொலு பொம்மை தயாரிக்க பதினைந்து  நாள் ஆகிறது. அளவுகளுக்கு ஏற்ப விலை நிர்ணயித்துள்ளதால் ஒரு செட் ரூ.150  முதல் ஐநூறு வரை விற்கிறோம்’ என்றனர்.

Tags : Manamadurai ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...