×

விவசாய நகைக்கடன் நிறுத்தமா? அச்சத்தில் விவசாயிகள்

சிவகங்கை, செப்.30:  சில வங்கிகள் நகைக்கடன் வழங்குவதை கடந்த ஒரு வாரமாக நிறுத்தியுள்ளதால், இனி அனைத்து வங்கிகளும் நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி விடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். விவசாயிகள், பொதுமக்கள் கூட்டுறவு வங்கி, கிராம வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாய நகைக்கடன், பயிர்க்கடன் வாங்கினர். நகை அடகு வைத்து திருப்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் ஓர் ஆண்டு முடிந்தவுடன் நகையை திருப்பி விட்டு மீண்டும் வைப்பர். ஓர் ஆண்டு முடிந்த மறுநாளே வட்டி விகிதம் மாறுபடும். விவசாய நகைக்கடன் வைத்தவர்களுக்கு ஓர் ஆண்டு முடிந்த மாறுநாளே அசல் மற்றும் வட்டிக்கு வட்டியுடன் ஏற்கனவே உள்ளதைவிட 5 சதவீதம் வட்டி அதிகரிக்கும்.
இதனால் ஓர் ஆண்டு முடியும் நிலையில் பணம் கட்டி திருப்பி விட்டு, அன்றே மீண்டும் வங்கிகளில் நகையை அடகு வைக்கின்றனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக சில வங்கிகளில் நகைக்கடன் வைக்க முடியாது என வாடிக்கையாளர்களை திருப்பி விடுகின்றனர். ஏற்கனவே விவசாய நகைக்கடன் வைத்திருப்பவர்களையும் நகையை திருப்பிவிடுமாறோ அல்லது திருப்பி வேறு நகைக்கடனாக வைக்கும்படியும் கூறுகின்றனர். இதனால் விவசாயிகள், பொதுமக்கள் குழப்படைந்துள்ளனர்.

நகைகளை உடனடியாக திருப்ப முடியாத நிலையில் நகைகளை திருப்பி விடுமாறு கூறுவதால் கடன் வாங்கி திருப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வங்கிகளில் விவசாய நகைக்கடன் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வந்ததையடுத்து சில வங்கிககள் முன் கூட்டியே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட த்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் அனைத்து வங்கிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு நகைக்கடனுக்கு ஓர் ஆண்டு முடிவு நாள் வரும். அன்றோ அல்லது அதற்கு முந்தைய நாட்களிலோ நகையை திருப்பி, மீண்டும் அடகு வைப்போம். கூடுதல் வட்டி கட்ட முடியாத நிலையில் கடன் தொகை அதிகரித்துவிடுமே என அவ்வாறு செய்வோம். ஆனால் தற்போது விவசாய நகைக்கடனில் இருந்த நகைகளை திருப்பி விட்டு மீண்டும் அதே விவசாய கடனாக வைக்க மறுக்கின்றனர். கேட்டால் காரணம் கூற மறுக்கின்றனர். விவசாய நகைக்கடனை நிறுத்தினால் கடுமையான பாதிப்பு விவசாயிகளுக்கு ஏற்படும். எனவே அவற்றை நிறுத்தாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். வங்கி ஊழியர்கள் கூறியதாவது: மத்திய அரசு சார்பில் விவசாய நகைக்கடன் நிறுத்தப்படலாம் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து விவசாய நகைக்கடன் வழங்குவதில் அனைத்து வங்கிகளிலுமே குழப்பம் ஏற்பட்டுள்ளது. சில வங்கிகளில் உயர் அதிகாரிகள் கடன் வழங்குவதை நிறுத்தச் சொல்லியுள்ளனர். இது குறித்து அரசுதான தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என்றனர்.  

Tags : Peasants ,
× RELATED வேளாண் பொருட்கள் இறக்குமதியால்...