×

திருவாடானை தாலுகாவில் வரத்து கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்

திருவாடானை, செப். 30: திருவாடானை தாலுகாவில் வரத்து கால்வாய்களை சிறப்பு நிதி ஒதுக்கி தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை தாலுகா ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் மாவட்டத்திலேயே அதிகளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இத்தாலுகாவில் அதிகமான பரப்பளவைக் கொண்ட கண்மாய்கள் குளங்கள் ஏராளமாக உள்ளன.
இந்த மாவட்டத்தில் வறட்சியை அறிந்திருந்த ராமநாதபுரம் மன்னர்கள் ஏராளமான நீர்நிலைகளை வெட்டி வைத்துள்ளனர். அதன் பிறகு வந்த மக்கள் ஆட்சியிலும் அவற்றை பராமரித்து வந்துள்ளனர்.இந்தக் கண்மாய் குளங்களுக்கு பெய்யும் மழைநீர் ஒரு கண்மாயில் இருந்து மற்றொரு கண்மாய் நிரம்பும் வகையில் வரத்துக் கால்வாய்களையும் உருவாக்கி வைத்துள்ளனர்.

கண்மாய், குளங்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை அரசு இந்த வரத்துக் கால்வாய் களுக்கு வழங்குவதில்லை. வரத்து கால்வாய்களை முறையாக சர்வே செய்து அவற்றை கண்மாய்கள் மராமத்து செய்யும்போது கால்வாய்களையும் மராமத்து செய்ய வேண்டும். ஆனால் வரத்துக் கால்வாய்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி மராமத்து செய்யப்படுவதில்லை. பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரத்துக் கால்வாய்கள் சில மீட்டர்கள் மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது. அதுவும் ஏதாவது ஒரு சில ஊர்களில் மட்டும் பெயரளவுக்கு வரத்து கால்வாய் தூர்வாரப்படும்.
இதனால் பெரும்பான்மையான வரத்துக் கால்வாய்கள் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து விட்டன. மணல் கடத்தும் கும்பல்கள் கால்வாய் மண்ணை அள்ளி சென்றுவிட்டதால், ஆங்காங்கே பள்ளமாக கிடைக்கிறது. இதனால் மழை பெய்யும் போது இந்த கால்வாய்கள் வழியே தண்ணீர் செல்ல முடியாமல் கண்மாய்கள் நிரம்புவதில்லை என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், வரத்துக் கால்வாய்கள் சீரமைக்க பட்டால்தான் கண்மாய், குளங்களில் மழை பெய்யும் போது தண்ணீர் அதிகளவில் தேக்கி வைக்க முடியும். ஆனால் ஒரு சிலர் அதிகாரிகளோடு கூட்டு சேர்ந்து கொண்டு பல கிராமங்களில் வரத்து கால்வாய்களை பட்டா போட்டு வாங்கி விட்டனர். சிலர் கால்வாயை ஆக்கிரமித்து விவசாயமும் செய்து வருகின்றனர்.அரசு கண்மாய் குளங்களை தூர்வார அதிக நிதி ஒதுக்குகிறது. அதில் ஆக்கிரமிப்பு இருந்தாலும் ஓரளவு அகற்ற முன்வருகின்றனர். அதே நேரத்தில் வரத்துக் கால்வாய்கள் தூர்வார தேவையான நிதி ஒதுக்குவது கிடையாது. ஆக்கிரமிப்பு இருந்தாலும் அதை அகற்றுவதும் கிடையாது. எனவே இனிமேலாவது வரத்து கால்வாய்களை கணக்கெடுப்பு செய்து ஆக்கிரமிப்பு இருக்கும்பட்சத்தில் அவற்றை அகற்றிட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறப்பு நிதி ஒதுக்கி மராமத்து செய்ய வேண்டும் என்றனர்.

Tags : Thiruvananthapuram Taluk ,
× RELATED திருவாடானை தாலுகாவில் நம்புதாளை ஊராட்சியில் அதிக வேட்பாளர் போட்டி