×

பறக்கும் பாலப் பணியால் தூசு பறக்கும் நத்தம் சாலை வாகன ஓட்டிகள், மக்களுக்கு சுகாதாரக்கேடு பாதுகாப்புடன் பணியை தொடர கோரிக்கை

மதுரை, செப். 30: மதுரை நத்தம் ரோட்டில் பறக்கும் பாலப்பணியால், சாலையில் குண்டும், குழியுமாகி தூசு பறக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. மதுரை பிடிஆர் சிலையில் இருந்து ஊமச்சிகுளம் செட்டிக்குளம் வரை நத்தம் சாலையில் 7.4 கிமீ தூரத்திற்கு பறக்கும் பாலக் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இப்பாலத்தை தாங்கி நிற்க 225 தூண்கள் அமைக்கப்படுகிறது. 2020 நவம்பருக்குள் பணியை முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்பேரில், பணிகள்  நடந்து வருகின்றன.   இதில், பிடிஆர் சிலை முதல் கலெக்டர் பங்களா வரை தூண்கள் அமைக்கப்பட்டு, மேல்தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் குண்டும், குழியுமாக இருந்த சாலை சீரமைக்கப்பட்டு, தூசு வெளியேறாதபடி பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆயுதப்படை குடியிருப்பு முதல் செட்டிக்குளம் வரை 7 கி.மீ தூரத்திற்கு தூண்கள் அமைக்க சாலையில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால், சாலை குண்டும், குழியுமாக மாறி தூசு பறக்கிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தூசை சுவாசப்பதால் நூரையீரல் பாதிப்பு, ஆஸ்துமா ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் சீருடைகளிலும் தூசு படர்கிறது. இந்த சாலையில் செல்வோர் முகமூடி அணிந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இது குறித்து மதுரை நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் கன.முனியசாமி கூறுகையில், ‘7.4 கி.மீ தூரத்திற்கு பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. முதல் 400 மீட்டர் தூரத்திற்கு சாலையில் தூசிபடராமல் சுத்தமாக பராமரிக்கின்றனர். இப்பகுதியில் கலெக்டர், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் இருக்கின்றனர். மற்ற 7 கி.மீ தூரத்திற்கு தூசு படர்வதை கண்டுகொள்வதில்லை. இதனால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் தூசு படர்கிறது.பாலக் கட்டுமானப் பணி 13 மாதத்தில் நிறைவடையும். எனவே, பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு, தோண்டிய பள்ளங்களை மூடி, மண்ணை அப்புறப்படுத்தி, தூசு பறக்காதபடி கட்டுமான பணியை தொடர வேண்டும்’ என்றார்.

Tags : motorists ,Nottam Road ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...