×

திருப்பரங்குன்றம், அழகர்மலையில் ஆய்வோடு நிற்கும் ரோப் கார் இழுவை ரயில் திட்டங்கள் எப்போது நிறைவேறும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு

மதுரை. செப். 30: திருப்பரங்குன்றம் மலையில் இழுவை ரயிலும், அழகர்மலையில் ரோப் கார் திட்டமும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு ஆய்வுடன் பல ஆண்டுகளாக நிற்கிறது. இந்த திட்டங்கள் எப்போது நிறைவேறும்? என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்தியாவின் 63 புராதன நகரங்களில் மதுரை முக்கிய இடம்பிடித்துள்ளது. தினமும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சமீபகாலமாக ஆன்மீக சுற்றுலா அதிகரித்து வருகிறது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருவோர், முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம், அழகர்கோயில் அழகர்மலையில் அமைந்துள்ள ஆறாம்படை வீடான முருகனின் சோலைமலை கோயிலுக்கு சென்று திரும்புகின்றனர். குறிப்பாக வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகமாக வந்து செல்கின்றனர்.

பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் திருப்பரங்குன்றம் மலை உச்சி வரை சென்று, அங்குள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில் தரிசிக்கவும், அங்கிருந்து மதுரை நகரின் எழில்மிகு தோற்றத்தை ரசிக்கவும், அழகர்மலையிலுள்ள நாகதேவதை கோயில் உள்ளிட்ட அபூர்வங்களை கண்டு ரசிக்கவும் விருப்படுகின்றனர். இதனால், சுற்றுலாப் பயணிகளை கவருவதற்கான புதுத்திட்டங்களை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் சுற்றுலாத்துறைக்கு உத்தரவிட்டது. இதனடிப்படையில், பல்வேறு திட்டங்களை சுற்றுலாத்துறை உருவாக்கி மத்திய, மாநில அரசுகளுக்கு பரிந்துரைத்தது. இதன்படி முக்கிய திட்டங்கள் வருமாறு:
  திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பழநியை போன்று இழுவை ரயில் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களுடன், பசுமலை, நாகமலை, யானைமலை மற்றும் மதுரை மாநகரின் முழு தோற்றத்தை கண்டு ரசிக்க முடியும்.
 அழகர்மலை மலை உச்சியில் நூபுரகங்கையும் அமைந்துள்ளது. இங்கு பழநியை போன்று ‘ரோப்கார்’ அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மலை அழகை முழுமையாக சுற்றுலாப் பயணிகள் ரசிக்க முடியும். இது குடும்பத்துடன் சுற்றுலா வருவோரையும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளையும் பெரிதும் கவரும்.
அழகர் மலையை ஒட்டிய குட்லாடம்பட்டியில் அமைந்துள்ள அருவியில் தண்ணீர் விழும் மழைக்காலங்களில் சுற்றுலாப் பயணிகள் சென்றுவர பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் வசதிகள் செய்யப்பட வேண்டும்.
இத்திட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் சுற்றுலாத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஆய்வுடன்  நடத்தப்பட்டு பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது. இந்த திட்டங்கள் எப்போது நிறைவேறும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அழகர்மலை சுற்றுலா மேம்பாட்டு திட்டம் ரூ.100 கோடியில் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு அறிவித்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிடப்பில் கிடக்கிறது.
இது குறித்து சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மதுரைக்கு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் நோக்குடன் புதுமைகளை புகுத்தும் திட்டம் தயாரித்து மத்திய, மாநில அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக மலை மீது இழுவை ரயில், ரோப்கார் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஹலிகாப்டர் சுற்றுலா  திட்டம் மத்திய சுற்றுலாத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. அதன்படி மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு ெஹலிகாப்டர் சுற்றுலா திட்டம் தயாரானது. எப்போது நிறைவேறும்? என்பது குறித்து அரசின் முடிவு எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்.

Tags : Thiruparankundram ,Alagaramalai ,
× RELATED அழகர்மலையில் இருந்து வந்த...