×

மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு சரியான நடவடிக்கை அல்ல

பழநி, செப். 30: மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு சரியான நடவடிக்கை இல்லையென பாரதீய மஸ்தூர் சங்கத் தலைவர் பழநியில் பேட்டி அளித்துள்ளார். பழநி அடிவாரத்தில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் முழுநேர ஊழியர்களுக்கான 3 நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட அகில பாரத தலைவரும், உலக நாடுகளுக்கான தொழிலாளர் அமைப்பின் இந்திய பிரதிநிதியுமான சஜி நாராயணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,அமெரிக்காவில் 2008ம் ஆண்டு வங்கி திவாலான சம்பவமே அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். மத்திய அரசு தற்போது மேற்கொண்டுள்ள வங்கிகள் இணைப்பு முயற்சியின் மூலமே ஒரே வங்கி என்ற நிலை உருவானால் அமெரிக்கா சந்தித்தது போன்ற ஒரு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மத்திய அரசின் வங்கிகள் இணைப்பு முயற்சி சரியான நடவடிக்கையாக இல்லை. நாடு முழுவதும் ஜவுளித்துறை கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால் ஏராளமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதற்கு முக்கியக் காரணம் ஜிஎஸ்டியாகும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு கடுமையாக உள்ளது. இதனைக் குறைக்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், ஜவுளித்துறை சரிவைத் தடுக்க ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கைகளை உருவாக்கவும் வலியுறுத்தி வருகிறோம். ரயில்வேத்துறை, திருச்சி பெல் நிறுவனம், சேலம் உருக்காலை, நெய்வேலி நிலக்கரி சுரங்கம் உட்பட சுமார் 17 பொதுத்துறை நிறுவனங்கள் நாடு முழுவதும் தனியார் மயமாக்கப்பட உள்ளதாக அறிகிறோம். ஏழை மக்களின் முக்கிய போக்குவரத்தாக விளங்கும் ரயில்வேத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சி தவறானது.சேவை மனப்பான்மையுடன் அரசு நடத்த வேண்டிய பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது என்பது லாபநோக்கில் செயல்பட வைக்கும். அது ஏழை மக்களை பாதிக்கும். பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வங்கிகளில் உள்ள கடுமையான விதிமுறைகளை சற்று தளர்த்த வேண்டும். இவ்வாறு கூறினார். பேட்டியின்போது தென்பாரத அமைப்புச் செயலாளர் துரைராஜ், மாநில செயலாளர் சிதம்பரசாமி, கேரள மாநில பொதுச் செயலாளர் ராஜீவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : banks ,government ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...