×

புதிய ஆர்டர்கள் இல்லாததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தவிப்பு

திருப்பூர்,செப்.30: வடமாநிலங்களில் தொடர் மழையால் அம்மாநிலங்களில் எதிர்பார்த்த வியாபாரம் இன்றி ஆடைகள் தேக்கம் அடைந்துள்ளதால் ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கான புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி இல்லாததால் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் 1500 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களும், நிட்டிங், டையிங், பிளீச்சிங், காம்பேக்டிங், கேலண்டரிங், பிரிண்டிங், எம்ராய்டரி  என3 ஆயிரத்துக்கு மேற்பட்ட டொமஸ்டிக் யூனிட்டுகள் மற்றும் இதனைச்சார்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பின்னலாடை சார்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இதில் 8 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

 திருப்பூர் ராயபுரம் காதர்பேட்டையில் உள்ள 1500  பின்னலாடை மொத்த வியாபார கடைகளில் 1200 கடைகளை வடமாநில வியாபாரிகள் நடத்துகின்றனர். இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 90 சதம் பேர் வடமாநில தொழிலாளர்களாக  உள்ளனர். வடமாநிலத்திலிருந்து வந்த வியாபாரிகள் காதர்பேட்டையில் கடைகளை பிடித்து மொத்த வியாபாரம் செய்து வருகின்றனர். வடமாநில சிறுவியாபாரிகளுக்கும், மொத்த ஜவுளிக்கடைகளுக்கு தேவையான துணிகளை ரயில், லாரி மூலமாக அனுப்புகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக வட மாநில வியாபாரிகளின் வரத்து 90 சதவீதம் தடைபட்டுள்ளது. காதர்பேட்டையில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச்சார்ந்த ஜவுளிக்கடை வியாபாரிகள், நைஜிரியர்கள் ஆகியோர் தான் ஆடைகள் வாங்க வருகின்றனர். தினமும் ரூ. 2 கோடிக்கு மேல் விற்பனை ஆனது தற்போது ரூ.50 லட்சத்துக்கு விற்பனை ஆவதே  அதிசயமாக உள்ளது.இது குறி்தது கதார்பேட்டை ஜவுளி சந்தையில் உள்ள பின்னலாடை மொத்த வியாபாரி தமிழ்செல்வன் கூறியதாவது.

காதர்பேட்டை ஜவுளி சந்தைக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் பலர் ஆடைகள் வாங்க வந்தனர். இவர்கள் ஆடைகளை கொள்முதல் செய்து தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். காதர்பேட்டையில் உள்ள தமிழக மொத்த வியாபாரக்கடைகளில் கேரளா மற்றும் நைஜிரியர்கள் மட்டுமே வியாபாரம் செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது எங்களுக்கு வேதனையாக உள்ளது. வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக தொடர் மழையால் அம்மாநிலங்களில் ஆடைகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மொத்த வியாபாரிகள் குறைவாகவே ஆர்டர் கொடுத்துள்ளனர். இதனால்,  ஆயுத பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகள் நெருங்கி வரும் நிலையில் மொத்த ஜவுளி வியாபார கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு காதர்பேட்டையில் பெரும்பாலான கடைகளை இழுத்து மூடும் சூழ்நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : backbone manufacturer ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...