×

கிண்ணக்கொரை சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மஞ்சூர், செப்.30: பலத்த மழையால் ராட்சத மரம் விழுந்து மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில்  போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.  மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் கேரிங்டன் அருகே ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது. இந்நிலையில் நேற்று காலை மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை பகுதிக்கு பயணிகளுடன் சென்ற அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் சம்பவ இடத்தின் இருபுறங்களிலும் அணிவகுத்து நின்றது.

இதனால் பேருந்தில் சென்ற மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதை தொடர்ந்து பஸ்களில் இருந்த தொழிலாளர்கள் சிலர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்ற முற்பட்டனர். நீண்ட நேர முயற்சிக்கு பின் வாகனங்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. அதன் பிறகே அங்கு வந்த நெடுஞ்சாலை துறையினர் சாலையோரத்தில் கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும். காற்று, மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைதுறை சார்பில் கிண்ணக் கொரை பகுதியில் பணியாளர்களை தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லையோர கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kinnakorai ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை