×

பவானிசாகர் அணை நீர்மட்டம் 96 அடியாக நீடிப்பு

சத்தியமங்கலம், செப். 30:   பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சீராக உள்ளதால் கடந்த 22 நாட்களாக அணையின் நீர்மட்டம் 96 அடியாக நீடிக்கிறது.
 ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.105 அடி உயரம் 32.8 டிஎம்சி கொள்ளவு கொண்ட இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 94 அடியை எட்டியதால் அணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காளிங்கராயன் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கும், கீழ்பவானி பிரதான வாய்க்கால் பாசனத்திற்கும் நீர் திறக்கப்பட்டது.  

இந்நிலையில் கடந்த 3 வார காலமாக அணைக்கு நீர்வரத்தும், அணையிலிருந்து பாசனத்திற்கு வெளியேற்றப்படும் தண்ணீரும் ஒரே அளவில் உள்ளதால், அணையின் நீர்மட்டம் கடந்த 22 நாட்களாக 96 அடியில் நீடிக்கிறது.நேற்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.95 அடியாகவும், அணையில் நீர் இருப்பு 25.6 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2299 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 500 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி நீர் என மொத்தம் 2800 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Bhawanisagar Dam ,
× RELATED ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர்...