×

விசைத்தறியாளர் போராட்டம் வாபஸ்

ஈரோடு, செப். 30:  சித்தோட்டில் விசைத்தறியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 ஈரோடு அருகே சித்தோடு பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் தினமும் நூல் விலை ஏற்ற, இறக்கத்தாலும் வெளிநாடுகளில் இருந்து ரேயான் துணிகள் இறக்குமதி செய்வதால், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவதாக கூறி கடந்த 22ம் தேதி முதல் சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர்.

இப்போராட்டத்தால் தினசரி 2.40 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் நெசவாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சித்தோடு விசைத்தறியாளர்கள் நாளை (இன்று) முதல் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.   இதுகுறித்து சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி தொழில் அதிக அளவில் நடந்து வருகிறது. சித்தோடு பகுதி பொருத்தவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைததறிகள் இயங்குகிறது. இங்கு ரேயான் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் துணிகளை இறக்குமதி செய்வதால், உள்நாட்டு உற்பத்தி துணிகள் ஏற்றுமதியாகாத நிலை உள்ளது. உள்நாட்டு உற்பத்தி துணியின் ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

நூல்விலை ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கினோம். சித்தோடு பகுதிகளில் அனைத்து விசைத்தறியாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டனர்.   தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் துணிகள் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். நாளை (இன்று) முதல் வழக்கம்போல விசைத்தறிகள் இயங்கும் என தெரிவித்தார்.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு