×

கேகே பட்டியில்புதர் மண்டிய ஆடு வதைக்கூடம்

கம்பம். செப். 26: கேகே.பட்டி பேரூராட்சி பகுதியில் 20 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன ஆடுவதைக்கூடம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் இறைச்சி வியாபாரிகள் வீதிகளில் ஆடுகள் அறுக்கும் அவலம் தொடர்வதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி உள்ளது. ஆண்டிபட்டி தொகுதிக்கு உட்பட்ட 15 வார்டு பகுதிகளைக் கொண்ட இப்பேரூராட்சியின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகள் மூலம் கோழி, மீன் மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகிலேயே, வீதிகளில் ஆடுகளை அறுத்து அதன் கழிவுகளை கழிவுநீர் சாக்கடைகளிலும், குப்பைகளிலும் வீசிவந்தனர். இதனால் இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டது.
இதைத்தடுக்கும் விதமாக காமயகவுண்டன்பட்டி பேரூராட்சியில், அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான நிதிபற்றாக்குறை ஈடு செய்யும் மானிய திட்டத்தின் கீழ் 2011 -12 ஆம் ஆண்டு ரூ.20 லட்சம் செலவில் பேரூராட்சி அலுவலகத்தின் பின்புறம் நவீன ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டது.

இறைச்சி வியாபாரிகள் ஆடுகளை இங்கு கொண்டு வந்து அதிகாரிகள் சோதனை செய்த பின் அறுக்கவேண்டும். ஆனால், இந்த நவீன இறைச்சிக்கூடம் கட்டப்பட்ட ஒருசில ஆண்டுகள் மட்டுமே இங்கு பயன்பாட்டில் இருந்தது. அதன்பிறகு இறைச்சி வியாபாரிகள் யாரும் இங்கு வருவதில்லை.
இதனால் நீண்ட நாட்களாக ஆடு வதைக்கூடம் பூட்டிய நிலையில் உள்ளது. தற்போது இந்த கட்டிடத்தை சுற்றிலும் முட்புதர் வளர்ந்துள்ளது. இதனால் மீண்டும் இப்பகுதியில் வீதிகளில் ஆடுகள் அறுக்கும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் கழிவுகள் சாக்கடையில் வீசப்படுவதால் நகர் முழுவதும் சுகாதாரம் பாதிப்பதோடு தொற்றுநோய்பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆடு வதைக்கூடத்தை மீண்டும் முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : KK ,goat slaughterhouse ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!