×

பழநி நகரில் வெளிமாநிலத்தவர் நடமாட்டம் அதிகரிப்பு

பழநி, செப். 26: பழநி நகரில் வெளிமாநிலத்தவரின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே அவர்களின் நடமாட்டத்தை காவல்துறை கண்காணிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஐயப்ப சீசன் துவங்க உள்ள நிலையில் பழநி கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தைப்பூசம், பங்குனி உத்திரம், கோடை விடுமுறை தினம் என 6 மாத காலம் பழநி நகரில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்களிடம் விற்பனை செய்வதற்காக அடிவார பகுதிகளில் ஏராளமான அளவில் பொம்மைக் கடைகள், பிளாஸ்டிக்- பேன்சி பொருள் கடைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. தவிர ராஜஸ்தான், குஜராத், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களும் பிளாஸ் ஆப் பாரீஸ் வகை பொம்மைகள், மத்தளம், மூங்கில் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய பழநி நகருக்கு வருவது வழக்கம்.

இவ்வாறு வருபவர்கள் இடும்பன் கோயில் மற்றும் சிவகிரிபட்டி பைபாஸ் பகுதிகளில் தற்காலிக டெண்ட் அமைத்து தங்குவர். இதில் சிலர் பக்தர்களிடம் திருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதும் உண்டு. கடந்த சில வருடங்களாக இவ்வியாபாரிகளின் போர்வையில் வரும் சில சமூகவிரோதிகள் பகல் நேரங்களில் பொம்மைகள் விற்பதையும், இரவு நேரங்களில் ஆளில்லாத வீடுகளில் புகுந்து திருடும் பழக்கத்தையும் கையாண்டு வந்தனர். இதன் காரணமாக கடந்த சில வருடங்களாக பழநி நகருக்கு வியாபாரம் செய்ய வரும் வெளிமாநில வியாபாரிகளின் விபரங்கள் மற்றும் புகைப்படம் ஆகியவை போலீசாரால் எடுக்கப்பட்டு கண்காணிப்பட்டு வந்தது.

தற்போது சீசன் துவங்க உள்ள நிலையில் வெளிமாநில வியாபாரிகள் பழநி நகருக்கு வந்து டெண்ட் அமைத்து தங்கி வியாபாரத்தை துவங்க ஆரம்பித்து விட்டனர். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வெளிமாநிலத்தவரின் விபரங்களை பெற்று கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Palani ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்