×

திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

உடுமலை, செப். 26:  திருமூர்த்தி அணையில் இருந்து 4ம் மண்டல பாசனத்துக்காக பிஏபி., வாய்க்கால் மற்றும் பழைய ஆயக்கட்டுக்கு தளி வாய்க்காலில் நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது.   உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணை 60அடி உயரம் கொண்டது. பிஏபி தொகுப்பு அணை வரிசையில், கடைசியில் உள்ள இந்த அணைக்கு, பரம்பிக்குளம் அணையில் இருந்து சர்க்கார்பதி மின்நிலையம் வழியாக கான்டூர் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. நான்கு மண்டலங்களாக பிரித்து பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.  அணையில் தற்போது 47.60 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. மூன்றாம் மண்டல பாசனம் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், 4ம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, செப்.25 முதல் தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலை பிஏபி பிரதான வாய்க்காலிலும், தளி வாய்க்காலிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பொத்தானை அழுத்தி மதகை திறந்துவிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயகார்த்திகேயன், எம்எல்ஏக்கள் தனியரசு, காளிமுத்து, செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர்கள் காஞ்சிதுரை, நரேந்திரன், உதவி பொறியாளர் சண்முகம் மற்றும் விவசாயிகள், அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
  பிரதான வாய்க்காலில் மொத்தம் 4 சுற்றுகளாக 7600 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் 94,068 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இதேபோல, தளி வாய்க்காலில் 700 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதன்மூலம் பழைய ஆயக்கட்டு பாலாறு படுகையில் 2786 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிரதான கால்வாயில் வினாடிக்கு 250 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு 912 கனஅடியாக வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் வட்டங்கள், கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, சூலூர் வட்டங்களில் 94,068 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றனர்.

Tags : Thirumurthi Dam ,
× RELATED மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு:...