×

மூலனூரில் தண்ணீர் தட்டுப்பாடு காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

தாராபுரம்.செப். 26:  திருப்பூர் மாவட்டம் மூலனூரில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை அடுத்த மூலனூர் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு  பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்களின் குடிநீர், தேவைகளுக்கு ஒரே ஒரு ஆழ்குழாய் கிணற்று மட்டுமே உள்ளது. குடிநீருக்கு  என காவேரி கூட்டுக்குடிநீர் திட்டம் கை கொடுத்து வந்தாலும் அது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மற்ற நேரங்களில் போர்வெல் மட்டுமே நம்பி உள்ளனர். போர்வெல் நிலத்தடி நீர்மட்டம் கீழே சென்றுவிட்ட நிலையில். நிலத்தடி நீரை உறிஞ்சும் பம்புகள் பழுதடைந்துள்ளன. இதனால், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன்  பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: நாங்கள் தினக்கூலிக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் அன்றாட தேவைகளான சமையல் செய்வது குளிப்பது கழிவறைக்கு செல்வது போன்ற பயன்பாட்டிற்கு கூட தண்ணீர் இன்றி தவித்து வருகிறோம்.

பழுதான போர்களை சீரமைத்து தர அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். பேரூராட்சி அலுவலர்கள் குடிநீருக்காக வேண்டி நாங்கள் சொல்லும் குறைகளை கேட்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதில்லை இனிமேலும் இந்த நிலை நீடித்தால் எங்கள் பகுதி மக்களை ஒன்று திரட்டி தாராபுரம் கரூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர். இந்த முற்றுகை போராட்டத்தின் போது அலுவலகத்திற்குள் இருந்த அதிகாரிகள் யாரும் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

Tags : Mulanur ,
× RELATED பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை