×

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுநர்களிடம் அபராதம் வசூலிக்க திணறும் போலீசார்

கோவை, செப்.26:கோவை நகரில் சிக்னல்களில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.  கோவை அவிநாசி சாலை மேம்பாலம் அருகே உள்ள சிக்னல், எல்.ஐ.சி சிக்னல், அண்ணா சிலை சிக்னல், லட்சுமி மில் சிக்னல், நவ இந்தியா சிக்னல் ஆகிய 5 சிக்னல்களில் தனியார் அமைப்பு சார்பில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்குள்ள நான்கு சாலைகளில் வரும் வாகன ஓட்டிகள், ஹெல்ெமட் அணியாமல் வருதல், பச்சை விளக்கு எரிவதற்குள் வாகனத்தினை செலுத்துதல், இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோர் வாகன பதிவு எண்களை அதிநவீன கேமரா துல்லியமாக படம் பிடித்து விடுகிறது. இந்த பதிவுகள் அனைத்தும் காட்டூரில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்திலுள்ள கணினியில் தெரியும். வாகன பதிவெண்ணை வைத்து உரிமையாளரின் பெயர், முகவரி ஆகியவற்றை அச்சடித்து அபராத சலான்கள் விதிமீறலில் ஈடுபடுவோரின் வீட்டுக்கு அனுப்பப்படும். இந்த 5 சிக்னல்களில் மட்டும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை விதிகளை மீறுகின்றனர். அவர்களுக்கான அபராத சலான்கள் போக்குவரத்து போலீசாரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை வாகன உரிமையாளர்களிடம் கொடுத்து அபராத தொகை வசூலிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவிக்கின்றனர்.

 இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: சலான்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு சென்றால் சில வாகன உரிமையாளர் வீட்டை காலி செய்து பல மாதங்கள் ஆகிறது என்றும் புதிய முகவரி யாருக்கும் தெரியாது என்றும் பெரும்பாலும் பதில்கள் வருகிறது. இதனால் அவர்களை கண்டுபிடித்து அபராதம் வசூலிக்க முடியவில்லை. இன்னும் சிலர் வாகனத்தை வாங்கினால் தங்களுடைய பெயருக்கு பெயர் மாற்றம் செய்வதில்லை. இதனால் முந்தைய வாகன உரிமையாளரிடம் சென்றால் யாரோ வாகன விதி மீறல்களில் ஈடுபட்டால் நாங்கள் பொறுப்பாக முடியுமா? என்று வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.  சரியான முகவரிக்கு சென்று அபராத தொகையை கேட்டாலும் சிலர் என்னிடம் பணம் இல்லை, ஒரு வாரம் கழித்து வாருங்கள் என்று தெரிவிக்கின்றனர். எனவே நாங்கள் வாகனத்துக்கு போடும் பெட்ரோலுக்கு ஆகும் செலவு அபராத தொகையை விட மிஞ்சிவிடுகிறது. அபராத தொகையை வசூலிப்பதற்கே தனியாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் ஏராளமான சலான்களை வைத்து கொண்டு சுற்றுகின்றனர். எனவே அபராதம் வசூலிப்பதற்கு மாற்று வழிமுறையை கண்டறிய வேண்டும். அப்போதுதான் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Motorists ,
× RELATED திருப்பதிசாரம் டோல்கேட்டில் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி