×

ஈரோடு மாவட்டத்தில் 250 தடுப்பணை கட்ட நடவடிக்கை

ஈரோடு, செப். 26:  ஈரோடு மாவட்டத்தில் 250 தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை இணை செயலாளர் கல்யாணி தெரிவித்தார்.  ஈரோடு மாநகராட்சி சார்பில் வைராபாளையம் குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும், மாநகர பகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகளும் நடக்கிறது. ஈரோடு பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புதுறை இணை செயலாளர் கல்யாணி ஆய்வு செய்தார். முன்னதாக, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளையும், பஸ் ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடத்தையும் பார்வையிட்டு தூய்மையாக வைத்துக் கொள்ள அறிவுரை வழங்கினார். இதைத்தொடர்ந்து, ஊராட்சிக்கோட்டை திட்டப்பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள் உள்ளிட்ட பணிகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர், இணைச் செயலாளர் கல்யாணி நிருபர்களிடம் கூறியதாவது: மழைநீர் சேகரிப்பு திட்டம் குடிமராமத்து பணிகள் மூலம் நீர் வீணாக செல்வதை தடுப்பதுடன் நீரை சேமிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மூலம் 5 ஆயிரம் லிட்டர் தொட்டியில் சேகரிக்கப்பட்டு குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.இது 10 ஆயிரம் லிட்டராக உயர்த்தப்படும். ஜல்சக்தி அபியான் திட்டத்திற்கு தனியாக எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களில் நீர் மேலாண்மை தொடர்பான நிதி மூலமாக இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதியை கொண்டு மாவட்டத்தில் 250 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுபோன்ற தடுப்பணைகள் கட்டுவதன் மூலம் அதிகளவில் நீரை தேக்க முடியும். மாநகராட்சி சார்பில் வைராபாளையத்தில் உள்ள குப்பை கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள உரங்கிடங்கு மூலமாக குப்பைகள் பிரித்து உரமாக்கப்படுகிறது. மேலும், பிற குப்பைகளை எரித்து செங்கல் தயாரிக்கின்றனர். இதனால், குப்பைகள் குறைந்து வருகிறது. இவ்வாறு கல்யாணி கூறினார்.இந்த ஆய்வின்போது கலெக்டர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர்கள் விஜயகுமார், ரவிச்சந்திரன், உதவி ஆணையர்கள் அசோக்குமார், விஜயா, சண்முகவடிவு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : blockchains ,Erode district ,
× RELATED மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு