×

குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட மண்ணை விற்று பல லட்சம் முறைகேடு

ஈரோடு, செப். 26:  ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கவும், கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட குழிகளில் இருந்து மண்ணை எடுத்து பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கும் வகையில் தனிக்குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தை ஆரம்ப கட்டத்தில் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் திட்டத்தை உரிய காலத்தில் செயல்படுத்தாத நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டு மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின்கீழ் பணிகளை செய்ய ரூ.484.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதன்மூலம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பவானி அருகே வரதநல்லூர் என்ற இடத்தில் இருந்து காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலமாக மாநகராட்சி பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது.
 இதற்காக, புதிய குடிநீர் மேல்நிலை தொட்டிகளும் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் திட்டம் செயல்படுத்தும் வரதநல்லூரில் இருந்து மாநகராட்சி பகுதி முழுதும் 731 கி.மீட்டர் தூரத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளுக்காக, குழி தோண்டும்போது குழியை மூடுவதற்கு பயன்படுத்திய மண் போக மீதமுள்ள மண்ணை எடுத்து அதிகாரிகள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  மேலும், பல இடங்களில் ஆழமான குழிகளை தோண்டி குழாய்களை பதித்தும், குடிநீர் மேல்நிலை தொட்டிகளையும் அமைத்துள்ளனர். இந்த இடங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை ஒரு லோடு 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய்க்கு வெளியிடங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற திட்டப்பணிகள் செய்யும்போது எடுக்கப்படும் மண்ணை மாநகராட்சிக்குட்பட்ட இடத்தில் கொட்டி வைக்க வேண்டும். ஆனால், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்ற துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மண்ணை விற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் சாக்கடை கழிவுநீர், சாய, தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதால் அந்த நீரை குடிக்க முடியாத நிலை உள்ளது. இதனால், மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டது.இந்த திட்டத்தை செயல்படுத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா 150 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். ஆனால், திட்டத்தை செயல்படுத்தாமல் இழுத்தடித்தனர். தற்போது, இந்த திட்டத்தை மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி உள்ளனர்.

இந்த திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக குழிகள் தோண்டும்போதும், குடிநீர் மேல்நிலை தொட்டிகள் அமைப்பதற்காகவும் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து பல ஆயிரம் லோடு மண் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணை வீடு கட்டுமான பணிக்கும், மேடை மண்ணாகவும் பயன்படுத்துவதற்காக வெளியிடங்களில் விற்பனை செய்துள்ளனர். வழக்கமாக, இவ்வாறு சேகரிக்கும் மண்ணை மாநகராட்சி ஒதுக்கி தரும் இடத்தில் கொட்டி வைத்து பின்னர், விற்பனை செய்திருந்தால் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் குறிப்பிட்ட வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், குடிநீர் வாரிய அதிகாரிகள் கூட்டு சேர்ந்து பல லட்சம் ரூபாய்க்கு மண்ணை விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். பெரிய திட்டத்தை செயல்படுத்தும்போது வெளிப்படையான தன்மை இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் எவ்வளவு மண் அள்ளப்பட்டது என்பது குறித்தும், அந்த மண்ணை எத்தனை லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள் என்பது குறித்தும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார் என்பது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும். இதுதொடர்பாக நாங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் உரிய விபரங்களை பெற்று நீதிமன்றத்தை அணுக உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.  இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்பதற்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை பலமுறை தொடர்பு கொண்டும் அவர்கள் பதில் அளிக்க மறுத்து விட்டனர்.

Tags : Millions ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...