×

பெருந்துறையில் கோயில் பெயரில் பரிசு சீட்டு விற்பனைக்கு தடை

பெருந்துறை, செப்.26:  பெருந்துறையில் கோயில் பெயரில் பரிசு சீட்டு விற்பனை செய்வதை தடை செய்து செல்லாண்டியம்மன் கோயில் செயல் அலுவலர் குழந்தைவேலு உத்தரவிட்டுள்ளார். பெருந்துறை பஸ் நிலையம் அருகே ஒரு சில நற்பணி மன்றங்கள் பெயரில் பரிசு சீட்டு குலுக்கல் நடத்துவதாக கூறி பைக், ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் என ஏராளமானபொருட்களை குவித்து வைத்து 100 ரூபாய்க்கு நன்கொடை சீட்டுகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நன்கொடை சீட்டுகளில் கோட்டை முனியப்பன், கோட்டை மாரியப்பன், வேதநாயகி அம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு விற்பதாக அச்சடித்துள்ளனர். இதுதொடர்பாக வந்த புகாரை அடுத்து கோயில் செயல் அலுவலர் குழந்தைவேலு நேற்று இந்த விற்பனையை நிறுத்த உத்தரவிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பெருந்துறையில் செல்லாண்டியம்மன் கோயில்களில் உபகோயில்களான கோட்டை மாரியம்மன், முனியப்ப சுவாமி கோயில், வருடாந்த பொங்கல் திருவிழா வரும் 8ம் தேதி முதல் 24ம் வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளை செய்யும் நிலையில் ஸ்ரீ வேதநாயகி நற்பணி மன்ற பொதுநல சங்கம் என்ற அமைப்பின் மூலமாக கோயில் பெயரை பயன்படுத்தி பரிசு கூப்பன் அச்சடித்து பெருந்துறை பஸ் நிலையம் அருகில் விற்பனை செய்து பணம் வசூல் செய்வது தெரியவருகிறது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிர்வாகம் எவ்வித அனுமதியும் வழங்காத நிலையில் தங்களது மன்றத்தினரால் நுழைவு சீட்டு பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடம் கோயில் பெயரை பயன்படுத்தி விற்பனை செய்து பணம் வசூலிப்பது ஏற்புடையது அல்ல. எனவே தாங்கள் உடனடியாக திருக்கோயில் பெயரை பயன்படுத்தி வசூலிப்பதை நிறுத்த உத்தரவிடப்படுகிறது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசனை கேட்டபோது பஸ் நிலையம் அருகே செட் அமைத்து பேனர் வைக்க பேரூராட்சி சார்பில் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை. அவர்கள் தன்னிச்சையாக இதுபோல் நடத்தி வசூல் செய்து வருகின்றனர் என கூறினார்.    
கோயில் பெயரை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக நன்கொடை வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி ஏற்கனவே சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஒவ்வொரு கோயில் வளாகங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுரை வழங்கியுள்ளார்.

Tags : Perundurai Temple Named ,
× RELATED காலை முதல் மது விற்பனை அமோகம்