×

இ-பட்டா கேட்டு விண்ணப்பித்த 70 பேருக்கு 2 நாட்களில் பட்டா

ஈரோடு, செப்.26: ஈரோடு வருவாய் கோட்ட அளவில், ஆன்லைன் மூலம் பட்டா கேட்டு விண்ணப்பம் செய்த, 70 பேருக்கு 2 நாட்களில் பட்டா வழங்கப்படும் என ஆர்டிஓ முருகேசன் தெரிவித்தார். தமிழகத்தில் வீடு மற்றும் நிலத்திற்கான பட்டா பெறுவதற்கும், கூட்டு பட்டாவை பிரிப்பதற்கும், பட்டா பெயர் மாற்றம், திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். இதில், நிர்வாகம் மற்றும் சாப்ட்வேர் பிரச்னை, காலதாமதம் போன்ற பல்வேறு காரணங்களால் பட்டாவை அதிகாரிகளின் நேரடி ஒப்புதல் மூலம் பெற்று வந்தனர். இந்நிலையில், 100 சதவீதம் ஆன்லைன் முறையில் மட்டுமே இ-பட்டாவை பெற, புதிய சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.விஏஓ., தாசில்தார், ஆர்டிஓ., டிஆர்ஓ., கலெக்டர் என அனைவரும் இதை ஆன்லைன் பட்டா போர்ட்டலில் கண்காணிக்கும் வசதி உள்ளது. மேலும், விண்ணப்பம் செய்த பட்டாதாரருக்கு குறிப்பிட்ட நாளில் பட்டா வழங்கவில்லை என்றாலும், உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், ஈரோடு வருவாய் கோட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் தற்போது வரை 70 பேர் பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கூறியதாவது: ஈரோடு வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய தாலுகா உள்ளன. இதில், கடந்த 1ம் தேதி முதல் 70 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவற்றை முறையாக விசாரித்து விஏஓ., தாசில்தார் ஆன்லைனில் அனுமதி வழங்கி உள்ளனர்.  அதை 2 நாளுக்குள் நானும் ஆய்வு செய்து, அனுமதி வழங்க உள்ளேன். பிரச்னைக்குரிய நிலங்கள், பட்டாவாக இருந்தால் மட்டும், நான் களஆய்வு செய்து அனுமதிக்கிறேன். நாங்கள் அனைவரும் அனுமதி வழங்கியதும், அதை மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) அனுமதித்து தனி பட்டாவாக உத்தரவிடுவார்.இ- சேவை மையங்களில் விண்ணப்பம் செய்யும்போதே, போதிய ஆவணங்களுடன், தெளிவாக விண்ணப்பம் இருந்தால், உடனடியாக பட்டா வழங்கப்படுகிறது. இதன்மூலம் காலதாமதம், அதிகாரிகளை நேரில் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தவறுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இதை அறியும்போது, வரும் நாட்களில் பட்டா தேவையானவர்கள், அதிகளவில் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது. ஒருமுறை பட்டா அனுமதி வழங்கி, பட்டா பெற்றால், தேவையானபோது, அதன் நகலையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஆர்டிஓ முருகேசன் கூறினார்

Tags :
× RELATED வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் உட்பட 3 பேர் கைது