×

பவானி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அதிகரிப்பு

பவானி , செப். 26:  பவானி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், பவானி அரசு மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போது பரவலாக கனமழை பெய்து வருவதாலும், பருவ மாற்றத்தாலும் சீதோஷ்ண நிலையில் ஏற்பட்டுள்ள மாறுதலால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக சளி, காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஆங்காங்கே உள்ள தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் நோயாளிகள் சிகிச்சைக்கு சென்று வருகின்றனர். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் கூட்டம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.  பவானி அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சராசரியாக 300 பேர் சிகிச்சைக்கு வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக 600 முதல் 750 பேர் வரை சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற  வருகின்றனர். இதனால், புறநோயாளிகள் பிரிவில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது.

 இதுகுறித்து பவானி அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:தொடர் மழையால் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சளி காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருந்துக் கடைகளில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடாமல் அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சைக்கு பெற வேண்டும்.
தொடர்ந்து இரு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை செய்து, அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.மேலும், குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தியாவது தடுக்கும் வகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். தண்ணீரை நன்றாக காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வீடுகளுக்குள் கொசுக்கள் வராமல் தடுக்க ஜன்னல்களில் கொசு வலைகளை பொருத்தலாம். வெளியில் செல்லும் வேளைகளில் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க முழுக்கை சட்டைகளை அணிவதோடு, கொசு கடிக்காமல் இருக்க மருந்து தடவிக் கொள்ளலாம்.

பவானி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் சிகிச்சை பெற  தனித்தனியே மூன்று வார்டுகள்  ஒதுக்கப்பட்டுள்ளன. சிகிச்சை பெறுபவருக்கு நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல் மற்றும் கஞ்சி வழங்கப்படுகறது.
இரு நாட்களுக்கு மேலாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படுகின்றன. டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி  உள்ளதா என கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bhavani Government Hospital ,
× RELATED பவானி அரசு மருத்துவமனையில் கொேரானா தடுப்பூசி இல்லை