×

திருவில்லிபுத்தூர் அருகே குப்பாமடம் பசும்பொன் நகரில் அடிப்படை வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதி

திருவில்லிபுத்தூர், செப். 26: திருவில்லிபுத்தூர் அருகே அத்திகுளம்-தெய்வேந்திரி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பாமடம் பசும்பொன் நகரில் தெற்குத் தெரு, நடுத்தெரு, வடக்குத் தெரு, கிழத்தெரு, மேலத்தெரு என மொத்தம் ஐந்து தெருக்கள் உள்ளன. கழிவுநீர் செல்லவும், தெருக்களில் சிமென்ட் தளம் இல்லாமல் இருப்பதாலும், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களிலே கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் தெருவிளக்கு இல்லாமல் இருப்பதால் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் தெரிவதில்லை. சேறும், சகதியான தெருவில் நடமாட முடியாமல் பெரும் அச்சத்துடனே மக்கள் நடமாட வேண்டிய அவலம் உள்ளது.

இந்நகரில், கடந்த 2010ம் ஆண்டு முதல் இங்கு குடியிருப்புகள் உருவாகி, தற்போது 50  வீடுகள் உள்ளன. 70க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். தெருவிளக்கு இல்லாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு பாம்பு கடித்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மூன்று மாதம் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். குடிதண்ணீர் வசதியும் இல்லை: தற்போது, ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் போட்டு தண்ணீர் தொட்டி வைத்துள்ளனர். எனவே, அனைத்து தெருவிற்கும் மின்விளக்குகள் அமைத்திட வேண்டும்.பேவர் பிளாக் கற்கள் பதித்து, கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்க வேண்டும். மானூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் அமைத்திடவும், பஸ்கள் நின்று செல்லவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசும்பொன் நகர் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : public ,facilities ,Tiruviliputhur ,Kuppamadam Pasumpon ,
× RELATED அதிகரித்து வரும் வெயில்...