×

செந்தாரப்பட்டி ஏரியின் வாய்க்காலை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தம்மம்பட்டி, செப்.26:  தம்மம்பட்டி அருகே ஏரி வாய்க்காலை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே 120 ஏக்கர் பரப்பளவில் செந்தாரப்பட்டி ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, பெருமாள் கோயில் அருகே சுவேத நதியின் மதகில் பிரிந்து, கோனேரிப்பட்டி வாய்க்கால் வழியாக செந்தாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மூலம் செந்தாரப்பட்டி, தம்மம்பட்டி, கோனேரிப்பட்டி, கொண்டையம்பள்ளி, பாலக்காடு சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்கள் பாசன வசதியையும், விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாகவும் விளங்குகிறது.

கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. செந்தாரப்பட்டி ஏரியின் பிரதான வாய்க்காலில், தற்போது செடி, கொடிகள் முளைத்து புதர்கள் மண்டியுள்ளது.தண்ணீர் வரும் வழித்தடம் முழுமையாக அடைத்து காணப்படுகிறது. இதனால் சுவேத நதியில் தண்ணீர் வந்தாலும், வாய்க்காலில் தண்ணீர் செல்வது தடைபட்டு, ஏரிக்கு முற்றிலுமாக தண்ணீர் வருவதில்லை. தற்போது மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.  எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ், செந்தாரப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்காலை தூர்வார வேண்டும் என ஆயக்கட்டு பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : lake ,Sentarapatti ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...