×

முதுகலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் போட்டி தேர்வு நாளை துவக்கம்

நாமக்கல், செப்.26:முதுகலை ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் போட்டித்தேர்வு நாளை துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 3 நாள் நடைபெறும் தேர்வை 24 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு, நாளை (27ம் தேதி) முதல் 3 நாட்கள் ஆன்லைன் மூலம் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வினை, 24 ஆயிரத்து 75 பேர் எழுதுகிறார்கள். 27ம் தேதி துவங்கும் தேர்வு 29ம் தேதி வரை தினமும் காலை, மாலை என இரண்டு வேளைகளில் நடைபெறுகிறது. பாடவாரியாக தனித்தனியாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் தேர்வு நடப்பதால், அதற்கான கம்ப்யூட்டர் வசதிகள் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வினை நடத்த, நாமக்கல் மாவட்டத்துக்கு பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பொன்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம், இணை இயக்குனர் பொன்னையா தலைமையில் நாமக்கல்லில் நேற்று நடந்தது. அப்போது தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் எவ்வாறு பணியாற்றவேண்டும் என அறிவுரை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, டிஇஓக்கள் ரமேஷ், உதயக்குமார் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கடந்த 3 மாதத்துக்கு முன், நாமக்கல் மாவட்டத்தில் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கான ஆன்லைன் போட்டித்தேர்வு நடைபெற்றது. இதில் ஒரு மையத்தில் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால், தேர்வு நிறுத்தப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டது. இந்த முறை அனைத்து முதுகலை ஆசிரியர் பாடங்களுக்கும், ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவதால், தேர்வினை குழப்பம் இல்லாமல் நடத்த தேவையான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். தேர்வு நடைபெறும் 11 மையங்களுக்கும், முதன்மைகல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் சென்று கம்ப்யூட்டர், இன்டர்நெட் இணைப்பு சரியாக உள்ளதா என கடந்த வாரம் தொடர்ந்து ஆய்வு செய்தனர்.

Tags : Postgraduate Teachers ,
× RELATED விடைத்தாள் மதிப்பீட்டு முகாமில்...