×

3 நாட்களாகியும் வெள்ளம் வடியவில்லை கொத்தம்பாளையத்தில் நீரில் மூழ்கிய தரைப்பாலம்


திருச்செங்கோடு, செப்.26: திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக, திருச்செங்கோடு அடுத்த கொத்தம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாததால், கிராம மக்கள் 5 கிமீ தொலைவு சுற்றிச்செல்லும் அவலம் நீடிக்கிறது.திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமம்  கொத்தம்பாளையம் அருகே, திருமணிமுத்தாற்றின் குறுக்கே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், தரைப்பாலம் கட்டப்பட்டது. சுமார் 100 அடி நீளமுள்ள இந்த பாலத்தைக் கடந்து தான், சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வெளியூருக்கு செல்கின்றனர். குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் இந்த பாலத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆண்டுதோறும் மழை காலங்களில், இந்த தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் செல்லும். அந்த சமயத்தில், வெள்ள நீரில் நடந்து பாலத்தை கடக்கும் போது, பொதுமக்கள் கீழே விழுந்து விபத்தில் சிக்குவது வாடிக்கையாக இருந்தது. இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்ற 20 ஆண்டு கால கோரிக்கை, இதுவரை நிறைவேற்றப்படவில்லை.  இந்நிலையில், சமீபத்தில் இந்த தரைப்பாலத்தை மேம்பாலமாக மாற்ற ₹3.54 கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு, அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்.

இதனிடையே, தற்போது சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கொத்தம்பாளையம் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கிராம மக்கள் சுமார் 5 கிமீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. தரைப்பாலத்தில் 5 அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் செல்வதால்  நடந்து பாலத்தை கடந்து செல்ல முடியாது. மூன்று நாட்களுக்கு மேலாகியும், இன்னும் வெள்ளமும் வடியவில்லை. மக்களின் துயரமும் தீரவில்லை. எனவே, விரைவில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.இதற்கிடையில், எலச்சிபாளையம் காவல் நிலையம் பின்புறமுள்ள 50 ஏக்கர் பரப்புள்ள ஏரி வறண்டு கிடக்கிறது. இந்த மழை வெள்ளத்தை, ஏரிக்கு திருப்பி விட வேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதன் மூலம் வெள்ள அபாயமும் தடுக்கப்படும். இந்த ஏரி நிரம்பினால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என தெரிவித்துள்ளனர்.


Tags : Flooding ,
× RELATED தேனி அணைப்பிள்ளையார் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு..!!